/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
24 மணி நேர கண்காணிப்பில் வைகை அணை நீர்மட்டம்
/
24 மணி நேர கண்காணிப்பில் வைகை அணை நீர்மட்டம்
ADDED : நவ 04, 2024 09:52 PM

ஆண்டிபட்டி; வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. பெரியாறு அணையில் இருந்து வரும் நீர் தேனி பழனிசெட்டிபட்டி அளவீட்டு மையத்தில்கண்காணிக்கப்படுகிறது. வருஷநாடு மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் அம்மச்சியாபுரம் அருகே உள்ள அளவீட்டு மையத்தில் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நீர்வரத்தை கணக்கில் கொண்டு வைகை அணையில் உள்ள அளவீட்டு மையத்தில் அணை நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது. மழை மற்றும் அவசர காலங்களில் நீர்மட்டத்தில் ஏற்படும் திடீர் உயர்வுக்கு தக்கபடி அணையில் நீர் வெளியேற்றம் செய்யப்படும். அணை நீர்மட்டம் நேற்று மதியம் 3:00 மணிக்கு 63.81 அடியாக உயர்ந்துள்ளது. அணை உயரம் 71 அடி. நீர் வரத்து வினாடிக்கு 1785 கனஅடியாக இருந்தது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.
நீர்வளத் துறையினர் கூறியதாவது: வைகை அணை நீர்மட்டம் 66 அடியானவுடன் முதல் வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.5 அடியில் 2ம் எச்சரிக்கையும், 69 அடியில் 3ம் எச்சரிக்கையும் விடப்பட்டு அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படும்.
தற்போதுள்ள சூழலில் அணை நீர்மட்டம் ஓரிரு நாளில் 66 அடியாக உயரும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளாக 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

