/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்புமனு தாக்கலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்
/
வேட்புமனு தாக்கலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்
ADDED : மார் 19, 2024 05:49 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20 முதல் மார்ச் 27 வரை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது வேட்பு மனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தேனி லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனாவிடம் தாக்கல் செய்யலாம். காலை 11:00 முதல் மதியம் 3:00 மனுத்தாக்கல் செய்யலாம்.
மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் ரூ.12,500 செலுத்த வேண்டும்.
மனுதாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தடை செய்யப்பட்ட 100 மீட்டருக்குள் வேட்பாளரின் 3 வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருபவர்கள் மட்டும் குறிப்பிட்ட 100 மீ. துாரத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக கலெக்டர் அலுவலகம் முன் மதுரை ரோட்டின் இரு புறம், கலெக்டர் அலுவலக வடக்கு நுழைவாயிலில் இருந்து 100 மீ., தொலைவு என 3 இடங்களில் கோடுகள் வரையப்பட்டது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக 20 எல்.இ.டி., விளக்குகள், ஆடியோவுடன் வீடியோ பதிவாகும் வகையிலான 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

