/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறைந்தளவே வழங்குவதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 'ஜல்ஜீவன்' திட்டம் செயல்பாட்டில் இல்லாததால் சில்வார்பட்டியில் மக்கள் தவிப்பு
/
குறைந்தளவே வழங்குவதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 'ஜல்ஜீவன்' திட்டம் செயல்பாட்டில் இல்லாததால் சில்வார்பட்டியில் மக்கள் தவிப்பு
குறைந்தளவே வழங்குவதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 'ஜல்ஜீவன்' திட்டம் செயல்பாட்டில் இல்லாததால் சில்வார்பட்டியில் மக்கள் தவிப்பு
குறைந்தளவே வழங்குவதால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு; 'ஜல்ஜீவன்' திட்டம் செயல்பாட்டில் இல்லாததால் சில்வார்பட்டியில் மக்கள் தவிப்பு
UPDATED : மார் 12, 2024 08:01 AM
ADDED : மார் 12, 2024 06:13 AM

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வாரியம் குறைந்தளவு சப்ளை வழங்குவதால் சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
சில்வார்பட்டி ஊராட்சியில் நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சமத்துவபுரம், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி கிராமங்களை உள்ளடங்கியது. இங்கு 12 வார்டுகள் உள்ளன 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்
வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் 4.50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குடிநீர் வாரியம் 1.50 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்குகிறது.
ஊராட்சி குடிநீர் தேவையை சமாளிக்க சிறுகுளம் கண்மாயில் 14 போர்வெல் அமைத்து உவர்ப்பு நீர் இரு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் துவங்காத ஒரே ஊராட்சியாக சில்வார்பட்டி ஊராட்சி உள்ளது.
இங்குள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 2000 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களுக்கு தினமும் 16 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது.
பள்ளி வளாகத்தில் 7500 லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் தொட்டியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மதியம் 12:00 மணிக்குள் குடிநீர் காலியாகிவிடும். இதனால் கோடைகாலத்தில் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
15 நாட்களாக குடிநீர் வரவில்லை
பிரியா, நல்லகருப்பன்பட்டி: எனது கணவர் ராணுவ வீரர். நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் பணிபுரிகிறார். நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி ரோட்டில் எங்களது வீட்டு பகுதியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. குழந்தைகளை வைத்து கொண்டு சிரமப்படுகிறோம்.
ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்கின்றனர். குடிநீர் வந்தபாடில்லை.
புறக்கணிக்கப்பட்ட முதல் வார்டு
வெங்கடேசன், முதல் வார்டு உறுப்பினர், நல்ல கருப்பன்பட்டி: நல்லகருப்பன்பட்டி வடக்கு காலனியில் சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசு தொந்தரவு அதிகம் உள்ளது. இப் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி தூய்மைப்படுத்தும் பணிக்காக சாரம் போட்ட நிலையில் பணி நடைபெறாமல் உள்ளது.
இதனால் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சமத்துவபுரத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது.
இதனால் இரவில் அந்தப் பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியில் சிமென்ட் ரோடு அமைக்கும் பணிக்காக ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யதனர். என்ன காரணமோ அந்த பணி மேற்கொள்ளவில்லை.
அங்கன்வாடி மையம் அருகே திறந்த வெளியில் சாக்கடை செல்கிறது. சாக்கடையை கட்டி தருவதற்கும், சாக்கடைக்கு அருகே உரசி செல்லும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டம் கொண்டு வர பலமுறை ஊராட்சி கூட்டத்தில் தெரிவித்து விட்டேன்.
இதனால் 11 கூட்டங்களில் கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன்.
தினமும் குடிநீர் கிடைக்குமா
வடிவேல்,சில்வார்பட்டி: இவ்வூராட்சியில் இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடைகாலத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜெயமங்கலம் வராகநதி அருகே குடிநீர் வாரியம் மெகா சைஸ் குழாய் அமைத்து குழாய் மூலம் சில்வார்பட்டி ஊராட்சிக்கு கொண்டு வந்து தினமும் குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும்.
ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள்
பரமசிவம், தலைவர், சில்வார்பட்டி ஊராட்சி: கிழக்கு அணை ஓடை பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப்பணி, சமுதாயக்கூடம் வரை பேவர் பிளாக் அமைத்தல், பெருமாள் கோவில் தெருவில் வடிகாலுடன் பேவர் பிளாக் கற்கள் அமைத்தல் உட்பட 11.60 லட்சத்தில் பேவர் பிளாக் ரோடு உட்பட ரூ.2.50 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஜல்ஜீவன் திட்டம் துவங்க பி.டி.ஓ., க்கள் மற்றும் திட்ட அலுவலரிடம் வலியுறுத்தி வருகிறோம். குடிநீர் வடிகால் வாரியத்திடம் குடிநீர் சரியான அளவில் வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

