ADDED : ஆக 20, 2025 07:26 AM

போடி : போடி பகுதியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நீர்வரத்து இன்றி கொட்டகுடி ஆறு வறண்டுள்ளது. இதனால் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
போடி பகுதியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குரங்கணி கொட்டகுடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர் பிடிப்பு பகுதியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன. எப்போதும் நீர் வற்றாமல் அருவியாய் விழுந்து கொண்டிருக்கும் குரங்கணி, கொட்டகுடி, நரிப்பட்டி பகுதியில் நீர்வரத்து இன்றி உள்ளது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கொட்டகுடி, அணைப்பிள்ளையார் அணை ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து இன்றி மணல் மேடுகளாகவும், பாறை கற்களாகவும் மாறி உள்ளன. ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து இல்லாததால் ஆற்றோரங்களில் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொட்டகுடி ஆற்றை நம்பி உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆற்று நீரை நம்பி விவசாய பணி மேற்கொண்டு வந்த விவசாயிகள் தற்போது பணிகள் செய்திட தயக்கம் காட்டி வருகின்றனர். மானாவாரி விவசாயிகளும் மழையை எதிர் நோக்கி உள்ளனர்.

