/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலை உறுதி திட்ட ஒப்பந்ததாரர்கள் தவிப்பு! பணம் நிலுவையால் பணிகள் பாதிப்பு
/
வேலை உறுதி திட்ட ஒப்பந்ததாரர்கள் தவிப்பு! பணம் நிலுவையால் பணிகள் பாதிப்பு
வேலை உறுதி திட்ட ஒப்பந்ததாரர்கள் தவிப்பு! பணம் நிலுவையால் பணிகள் பாதிப்பு
வேலை உறுதி திட்ட ஒப்பந்ததாரர்கள் தவிப்பு! பணம் நிலுவையால் பணிகள் பாதிப்பு
ADDED : ஏப் 01, 2024 06:43 AM
கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பேவர் பிளாக் பதித்தல், சிறு பாலம், கழிவுநீர் வடிகால், சிமென்ட் ரோடு அமைத்தல், சத்துணவுக்கூடம், வகுப்பறை கட்டிடம் கட்டுமானம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர் மூலம் சிமென்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட தளவாட பொருட்கள் கொண்டு வந்து பயன்படுத்தப்படுகிறது. கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் சம்பளம் கணக்கிட்டு அவ்வப்போது வழங்கப்படுகிறது.
பணிகளில் தளவாடப் பொருட்கள் வினியோகத்திற்கான செலவுகளை கணக்கிட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைக்கின்றனர்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பலருக்கும் கடந்த ஆறு மாதமாக ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிலுவைத் தொகையாக உள்ளது. இதே நிலை ஒன்றியங்களில் மாவட்டம் முழுவதும் பல ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பணிக்கு தளவாட பொருட்கள் சப்ளை செய்து நிதி பெறமுடியாமல் தவிக்கின்றனர்.
ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
கடந்த காலங்களில் பணிகள் முடிந்த ஒரு மாதத்தில் பணம் கிடைத்து விடும். இதனால் அடுத்தடுத்து தேர்வு செய்யப்படும் பணிகள் தொய்வின்றி நடைபெறும். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.2 கோடிக்கும் அதிகமாக நிலுவை உள்ளது.
மாவட்டம் முழுவதும் பல கோடி நிலுவையாக இருப்பதால் திட்டத்தில் பயனாளிகளுக்கு தொடர்ந்து வேலையும் கொடுக்க முடியவில்லை.
பணிகளும் பாதிப்படைகிறது. தற்போது லோக்சபா தேர்தல் பணிகளால் நிலுவைத் தொகை கிடைப்பதில் இன்னும் சில மாதங்கள் தாமதம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிலுவைத் தொகைக்கான வட்டியை கணக்கிட்டால் ஒப்பந்த பணிகளில் நஷ்டமே ஏற்படுகிறது. நிலுவைத் தொகை உடனுக்குடன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

