/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் இருந்து சென்னை ரயிலை தினமும் இயக்க எதிர்பார்ப்பு! திருச்சி, விருத்தாச்சலம் வழியாக எழும்பூருக்கு சிறப்பு ரயில் தேவை

ADDED : மே 21, 2024 07:58 AM

போடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்தாண்டு ஜூன் 15ல் அதிவேக ரயில் சேவை துவங்கியது. இந்த ரயில்(20602) மதுரை, திண்டுக்கல், சேலம், காட்பாடி, வழியாக சென்னை சென்ட்ரல் செல்கிறது. இந்த ரயிலில் முன்பதிவில்லா பெட்டி 3, சாதாரண படுக்கை வசதி பெட்டி 4, மூன்று டயர் ஏ.சி., பெட்டி 7, இரு டயர் ஏ.சி.,பெட்டிகள் 2, ஒரு முதல்தர ஏ.சி., பெட்டி உட்பட 19 பெட்டிகள் உள்ளது.
போடியில் ஞாயிறு, செவ்வாய், வியாழனில் இரவு 8:30மணிக்குக்கு புறப்பட்டு, மறுநாள் நாள் காலை 7:55 மணிக்கு சென்டல் செல்கிறது. சென்னையில் இருந்து இதே மார்க்கத்தில் திங்கள், புதன், வெள்ளியில் இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:40 மணிக்கு போடி வருகிறது. இந்த ரயில் சேவை துவங்கி ஓராண்டு ஆகியும் வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படுகிறது.
பஸ் கட்டணத்தை விட குறைந்த கட்டணம் என்பதால் இந்த ரயிலுக்கு தேனி மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் மூன்று நாட்கள் மட்டும் இயக்குவது, டிக்கெட் கிடைக்காதது போன்ற பிரச்னைகளால் பலர் ஆம்னி பஸ் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதே போல் ரயில் சேலம், கட்பாடி வழி செல்வதால் ஒன்னரை மணிநேரம் வரை பயண நேரம் கூடுதலாகிறது. இதை தவிர்க்க திருச்சி, விருதாச்சலம், செங்கல்பட்டு வழியாக சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண படுக்கை வசதி பெட்டி அதிகரிக்க வேண்டும்
சரவணகுமரன், செயலாளர்,கார்டமம் சிட்டி ரயில் யூசர்ஸ் அசோசியேசன்,போடி:சென்னை ரயிலை தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயிலில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அரக்கோணத்தில் நிறுத்த வேண்டும். மதுரையில் இருந்து புறப்படும் மஹால் எக்ஸ்பிரஸ்சினை போடியில் இருந்து இயக்க வேண்டும்.
திருச்சி, செங்கல்பட்டு வழியாக ரயில் இயக்கினால் மாவட்டத்தில் வணிகம் தொடர்பாக, வேலை வாய்ப்பு தேடி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலை போடியில் இருந்து மதுரைக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கும் இயக்கினால் மருத்துவம், படிப்பு வசதிக்காக செல்பவர்கள் பயனடைவர்.