/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்துக்கால்வாய் பராமரிக்காததால் நிரம்பாத பாலசமுத்திரம் கண்மாய் மூலவைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கண்மாய்களுக்கு பயனில்லை
/
வரத்துக்கால்வாய் பராமரிக்காததால் நிரம்பாத பாலசமுத்திரம் கண்மாய் மூலவைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கண்மாய்களுக்கு பயனில்லை
வரத்துக்கால்வாய் பராமரிக்காததால் நிரம்பாத பாலசமுத்திரம் கண்மாய் மூலவைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கண்மாய்களுக்கு பயனில்லை
வரத்துக்கால்வாய் பராமரிக்காததால் நிரம்பாத பாலசமுத்திரம் கண்மாய் மூலவைகை ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கண்மாய்களுக்கு பயனில்லை
ADDED : பிப் 08, 2024 05:10 AM

ஆண்டிபட்டி, : நீர் வரத்து கால்வாய் முறையாக பாராமரிக்காததால் மூலவைகை ஆற்றில் தொடர்ச்சியாக வெள்ளம் சென்றும் பாலசமுத்திரம் கண்மாய் முழுமையாக நிரம்ப வில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம், பாலசமுத்திரம் நல்லடிச்சேரி கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பெரிய ஓடை வழியாகவும், மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் வழியாகவும் நீர் வரத்து கிடைக்கும்.
இந்தாண்டு போதுமான மழை பெய்தும் மூலவைகை ஆற்றில் தொடர்ச்சியான நீர் வரத்து இருந்தும் கண்மாய்க்கு நீர் முழு அளவில் வந்து சேராததால் நிரம்பவில்லை. 300 ஏக்கர் பரப்புள்ள கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
கண்மாயின் கரைகள் பல இடங்களில் மழை நீர் அரிப்பால் சேதம் அடைந்துள்ளது. நீர்வரத்து கால்வாயில் புதர் மண்டியுள்ளதால் மூல வைகை ஆற்றில் இருந்து வரும் நீர் முழு வேகத்தில் கண்மாய்க்கு வந்து சேர்வதில்லை.
இதனால் கண்மாய் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்மாய் நீரை நம்பி இரு போகம் சாகுபடி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும்
சவுந்தர், முத்துச்சங்கிலிபட்டி: கண்மாய் நீரை நம்பி பாலசமுத்திரம், ரோசனைப்பட்டி, முத்துச்சங்கிலிபட்டி, நல்லமுடிபட்டி, பிராதுக்காரன்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. கண்மாயில் ஒரு முறை முழு அளவில் நீர் நிரம்பினால் இப்பகுதியில் பல ஏக்கரில் நெல் உட்பட இரு போக சாகுபடி சாத்தியமாகும். மூல வைகை ஆற்றில் இருந்து கடந்த சில மாதமாக கால்வாய் வழியாக தொடர்ச்சியான நீர் வரத்து இருந்தும் முழு அளவில் வந்து சேரவில்லை. முறையான நீர் வரத்து இருந்தால் சில வாரங்களில் கண்மாய் நிரம்பி விடும். மூன்று மாதம் ஆகியும் கண்மாய் நிரம்பாததால் ஏமாற்றம் அளிக்கிறது. கண்மாய் மதகு வழியாக நீர் கசிந்து வீணாகிறது. மூல வைகை ஆறு துரைச்சாமிபுரம் தடுப்பணையிலிருந்து ரங்கசமுத்திரம் கண்மாய் வரை சிமென்ட் கால்வாய் அமைத்தால் கால்வாய் வழியாக வரும் நீரால் மூன்று கண்மாய்கள் விரைவில் நிரம்பி விடும். பொதுப்பணித்துறை, நீர்ப்பாசன துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பணையை உயர்த்த வேண்டும்
நடராஜ், பாலசமுத்திரம்: மூலவைகை ஆற்றில் ஆத்தங்கரைப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்துதான் கால்வாய் வழியாக மரிக்குண்டு பொம்மையசாமி நாயக்கர் கண்மாய்க்கு இரு நாட்களும், பாலசமுத்திரம் நல்லடிச்சேரி கண்மாய்க்கு 4 நாட்களும், ரங்கசமுத்திரம் கண்மாய்க்கு 4 நாட்களும் சுழற்சி முறையில் நீர் செல்கிறது. ஆத்தங்கரைபட்டி தடுப்பணை பள்ளமாக உள்ளது. வாய்க்கால் மேடாக இருப்பதால் நீரின் வேகம் குறைகிறது. தடுப்பணையை இன்னும் சில அடிகள் உயர்த்தினால் நீரின் வேகம் அதிகரித்து கண்மாய்க்கு கூடுதல் நீர் வந்து சேரும். கண்டமனூர் வரையில் நீரின் வேகம் அதிகம் இருந்தாலே போதும். அதற்குப் பின் நீர் விரைவில் வந்து சேரும்.
பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களுக்கு கொண்டுவர விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஆண்டிபட்டி தொகுதி விவசாயிகளின் நீர் ஆதாரம் மேம்படுவதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சி இதுவரை நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டி தொகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக ஏமாற்றம் அடைகின்றனர்.

