/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்கரை பேரூராட்சியில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் தாமதம்: மேல்நிலை தொட்டிகள் அமைக்க இட தேர்வில் இழுபறி
/
தென்கரை பேரூராட்சியில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் தாமதம்: மேல்நிலை தொட்டிகள் அமைக்க இட தேர்வில் இழுபறி
தென்கரை பேரூராட்சியில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் தாமதம்: மேல்நிலை தொட்டிகள் அமைக்க இட தேர்வில் இழுபறி
தென்கரை பேரூராட்சியில் 'அம்ரூத்' குடிநீர் திட்ட பணிகள் தாமதம்: மேல்நிலை தொட்டிகள் அமைக்க இட தேர்வில் இழுபறி
ADDED : மே 01, 2025 07:02 AM

தேனி: தென்கரை பேரூராட்சியில் 'அம்ரூத்' குடிநீர் திட்டத்தில் மேல்நிலை தொட்டிகள் அமைக்க அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய மறுப்பதால் பணிகள் தாமதம் ஆகிறது. இதனால் திட்ட பணிகள் இரு ஆண்டுகளாகியும் அரையும், குறையுமாக உள்ளது.
பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் உள்ள டி.கள்ளிபட்டி, கைலாசபட்டி, பாரதிநகர் பகுதிகளில் உள்ள 3700 வீடுகளுக்கு தினமும் 90 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.12.4 கோடி மதிப்பில் 'அம்ரூத்' குடிநீர் திட்டம் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டது. திட்ட பணிகள் 2023 மே17 ல் துவங்கி 2025 ஜூன் 30ல் முடிக்க வேண்டும்.
இத் திட்டத்தில் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து குடிநீர் வழங்கப்படும்.
இத் திட்டத்திற்காக 5 இடங்களில் மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள், சுமார் 40 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்தது வருகிறது. ஆனால், திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
பேரூராட்சி பகுதியில் பல மாதங்களுக்கு முன்பே தெருக்களில் ரோடுகளை தோண்டி குழாய் பதித்து, வீடுகளுக்கு மீட்டர் பொருத்தி இணைப்பு கொடுத்தனர். ஆனால் இதுவரை சோதனை முறையில் கூட குடிநீர் சப்ளை துவங்கவில்லை. நல்லா இருந்த ரோடுகளை குழாய் பதிக்க பல இடங்களில் துண்டித்து முறையாக மூடாமல் மேடு பள்ளங்களாக மாற்றி விட்டனர்.
தாமதம் ஏன்: இத் திட்டத்தில் 5 இடங்களில் மேல்நிலைத்தொட்டி அமைகிறது. இதுவரை 3 மேல்நிலை தொட்டிகள் கட்டி முடித்துள்ளனர். மீதியுள்ள 2 மேல்தொட்டிகள் கட்டுவதற்கான இடம் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளதால் இடத்தை கையகப்படுத்த முடியாமல் பணிகள் தாமதமாகிறது.
கோடை காலம் துவங்கியதால் பாரதிநகர், கள்ளிப்பட்டி பொதுமக்கள் பலரும் தினமும் டூவீலர்களில் பெரியகுளம் நகராட்சி பகுதிக்கு சென்று கேன்களில் குடிநீர் பிடித்து வரும் அவலம் தொடர்கிறது. பணிகளை விரைந்து முடித்து திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி செயலாளர் குணாளன் கூறுகையில், 'இத் திட்டத்தில் 5 இடங்களில் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி அமைகிறது.
தொட்டிகள் அமைக்க இடத்தேர்வில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் இடம் பெற முயற்சி நடந்து வருகிறது. பணிகளை விரைவு படுத்த கலெக்டரும் அறிவுறுத்தி உள்ளார். வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.

