ADDED : ஏப் 01, 2024 11:56 PM
கம்பம் : தேர்தல் பரபரப்பு கொஞ்சமும் இல்லாமல் மேகமலை கிராமங்கள் அமைதியாக உள்ளன.
தேனி லோக்சபா தொகுதியில் கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தி.மு.க.வில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. வில் நாராயணசாமி, அ.ம.மு.க. தினகரன், நாம் தமிழர் கட்சி மதன் - போட்டியிடுகின்றனர் . வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலையில் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ஆனால் தேர்தல் நடக்கும் பரபரப்பே இன்றி மேகமலை கிராமங்கள் உள்ளன.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு, அப்பர் மணலாறு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குள் வருகிறது. இங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
சின்னமனூரிலிருந்து மேகமலை கிராமங்களுக்கு சென்று வர வேண்டும் என்றால் ஒரு நாளாகும். குறைந்தது 50 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
எனவே இதுவரை எந்த வேட்பாளரும் மேகமலை கிராமங்களுக்கு செல்லவில்லை. இதனால் அங்குள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர்.

