/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடர்வது உறுதி
/
மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடர்வது உறுதி
ADDED : ஏப் 15, 2024 01:16 AM

வாடிப்பட்டி- ''மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடர்வது 100 சதவீதம் உறுதி. பிரதமர் மோடியின் நேரடி பார்வையில் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் உள்ளதால் தேனி தொகுதி வளர்ச்சிக்கு உதவும்,'' என, மதுரை பொதும்பு பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட த.மா.கா., தலைவர் வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
தேனி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரனை ஆதரித்து அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சென்னை ஆர்.கே.,நகர் தேர்தலில் ஆட்சியாளர்கள், ஆட்சியில் இருந்தவர்கள் என மிகப்பெரிய சின்னங்களை டெபாசிட் இழக்க செய்தனர். ஆனால் சோதனைகளை சாதனைகளாக மாற்றக்கூடியவர் தினகரன்.
மத்திய பா.ஜ., அரசின் 10 ஆண்டு கால சிறப்பான ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். பிரதமர் மோடி தமிழுக்கும், கலாசாரத்திற்கும் மரியாதை தருபவர். திருக்குறளை உலக நாடுகளில் பேசக்கூடியவர். அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக பா.ஜ.,உள்ளது. இதற்கு நேர் மாறாக தமிழகத்தில் தி.மு.க., மக்கள் விரோத ஆட்சி உள்ளது. மக்களுக்கு நன்மை செய்கிறோம் என தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் உண்மை முகம் வேறு.
போதை புழக்கம், மது உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஊழல் செய்வது, மதுவிலக்கு என டாஸ்மாக் கடைகளை அதிகரிப்பது, விலைவாசி ஏற்றத்தில் 'நம்பர் ஒன்னாக' தி.மு.க., அரசு உள்ளது.
தி.மு.க.,வேட்பாளர்கள், அமைச்சர்கள் பிரசாரத்திற்கு வரும்போது நகை கடன், கல்வி கடன் ரத்து என்னானது என மக்கள் கேட்க வேண்டும். மக்கள் மீது வரி சுமை விலை உயர்வை சுமத்தியுள்ளது தி.மு.க., அரசு.
இந்த நிலை மாற வேண்டுமென்றால் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமான தேர்தல் இந்த லோக்சபா தேர்தல் என்பதை மக்கள் மறக்க கூடாது. தி.மு.க.,வின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்ற ஒரு நாள் போதாது. இத்தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்றார்.

