/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ்ப்புத்தாண்டு நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
/
தமிழ்ப்புத்தாண்டு நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்ப்புத்தாண்டு நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
தமிழ்ப்புத்தாண்டு நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை திராளான பக்தர்கள் சாமி தரிசனம்
ADDED : ஏப் 15, 2024 01:07 AM

தேனி,- தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல் தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிவகணேச கந்த பெருமாள் கோயிலில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டிபட்டி:தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனைநீர் கோயிலின் சிறப்பு.
சித்திரை முதல் நாளான நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். விரதம் இருந்த பக்தர்கள் காவடி, பால் குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. ஆண்டிபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், குடிநீர் வசதியை தன்னார்வலர்கள் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டிபட்டி காளியம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பால விநாயகர், வீர ஆஞ்சநேயர், சக்கம்பட்டி வீரப்பன் அய்யனார், நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில்களில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய பக்தர்கள் ஆர்வத்துடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
போடி: - தீர்த்தத்தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் நடப்பது வழக்கம். நேற்று முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
மூலிகை கலந்த தீர்த்த சுனை நீரில் ஏராளமான பக்தர்கள் நீராடி முருகனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.
போடி - - தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திர புத்திரனார் கோயிலில் சித்திர புத்திரனாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.
போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஐய்யப்பன் கோயிலில் கனிகள் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோயிலிலிருந்து உற்ஸவர் எழுந்தருளி தீர்த்ததொட்டி தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர், அறம் வளர்த்த நாயகி, சண்டிகேஸ்வரர், அறம் வளர்த்த நாயகி சமேத ராஜேந்திர சோழீஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வரதராஜப் பெருமாள் கோயில், பாலசாஸ்தா கோயிலில் ஐயபனுக்கு மா, பலா, வாழை, ஆரஞ்சு, திராட்சை உட்பட பல்வேறு பழங்கனினால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அர்ச்சகர் பிரசன்னா பூஜைகள் செய்தார் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், பெரியகுளம் ஞானாம்பிகை காளஹஸ்தீஸ்வரர் கோயில், தென்கரை இந்திரன்புரிதெரு தையல்நாயகி உடனுறை சிவனேஸ்வரர் கோயில், வடகரை மலைமேல் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயில், நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதைக்கு கனி அபிஷேகம் செய்யப்பட்டது. வாணியர் தெரு சங்க விநாயகர் கோயில் சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கம்பம்: கம்ப ராயப்பெருமாள் கோயில், வேலப்பர் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில், யோகநரசிங்கபெருமாள் கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில், லெட்சுமிநாராயண பெருமாள் .கோயில்கள் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
கூடலுார்: தாமரைக்குளம் வான்மீக நாதர் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. வார வழிபாட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
வான்மீக நாதர் ஈஸ்வரன் கோயில் திருப்பணி அறக்கட்டளை சார்பில் கோயில் வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர்.
சுந்தரவேலவர் திருக்கோயில், வழிவிடும் முருகன் கோயில், சித்தி விநாயகர், கோயில் பிள்ளையார் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

