ADDED : மார் 23, 2024 06:17 AM
தேனி: மாவட்டத்தில் நேற்று பறக்கும் படையினர், நிலைக்குழுவினர் சோதனை செய்ததில் 3 இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி தொகுதி கண்டமனுார் அருகே ராமசந்திராபுரத்தில் நிலை கண்காணிப்பு குழு அலுவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக வந்த மினிலாரியில் சுருளிபட்டி மாட்டு வியாபாரி சுப்பையாவிடம் 53, சோதனை செய்தனர்.
அவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர்.மாலையில் அண்ணாநகரில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் சோதனை நடந்தது.
அவ்வழியாக டூவிலரில் வந்த தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர் சுதாகரன் 28, ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் ரூ.82,740 பறிமுதல் செய்து ஆண்டிப்பட்டி சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.கம்பம் -குமுளி ரோட்டில் மயிலாடும்பாறை பி.டி.ஓ., நாகராஜன் தலைமையில் நடத்திய சோதனையில் அவ்வழியாக கேரளா, வள்ளி கொன்னம் சபிமோன் 32, சென்ற காய்கறி லாரியை சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

