/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பஞ்சவன் மாதேவி நினைவு கோவிலில் கும்பாபிஷேகம்
/
பஞ்சவன் மாதேவி நினைவு கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 10, 2025 02:08 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவி நினைவாக கட்டப்பட்டுள்ள பள்ளிப்படை கோவில் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்கள நாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கோவில் ராஜராஜ சோழனின் 5-வது மனைவியான பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை கோவிலாகும்.
இறந்தவர்கள் நினைவாக கட்டப்படும் கோவில், பள்ளிப்படை கோவில் எனப்படுகிறது. அந்த இடத்தில், இறந்தவர் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.
பஞ்சவன் மாதேவி, ராஜராஜ சோழனின் மகன், ராஜேந்திர சோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு, தன் சொந்த மகனாக வளர்த்து வந்தார்.
தனக்கு குழந்தைகள் பிறந்தால், ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்துவிடுவர் என அஞ்சி, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என, மூலிகை மருந்து குடித்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொண்டார்.
இத்தியாகத்தை செய்த பஞ்சவன் மாதேவி மறைந்த பிறகு, ராஜேந்திர சோழன், தன் சிற்றன்னையின் நினைவாக மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலை அமைத்தார்.
இக்கோவிலில், 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பதினாறு ஆண்டுகளுக்கு பின், அறநிலையத்துறை சார்பில், 61 லட்சம் ரூபாய் செலவில், கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 7-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது.
நேற்று, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

