/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குலதெய்வ வழிபாட்டிற்கு கூட்டு வண்டியில் பயணம்
/
குலதெய்வ வழிபாட்டிற்கு கூட்டு வண்டியில் பயணம்
ADDED : ஆக 06, 2025 08:55 AM

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் வேலங்குடி பகுதி மக்கள், அழகர் கோயிலில் குலதெய்வ வழிபாட்டிற்காக பாரம்பரிய கூட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.
கோட்டையூரில் உள்ள வேலங்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நாட்டார்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய முறையில் இரட்டை மாடுகள் பூட்டிய கூட்டு வண்டிகளில் அழகர் கோயிலுக்கு பயணம் மேற்கொள்வர்.
அழகர் கோயிலில் ஆடித் திருவிழா தொடங்கியதும் கோயிலில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு திரு ஓலை அனுப்பப்படுகிறது. ஓலை வந்ததும், பாரம்பரிய பயணத்திற்கு கூட்டு வண்டிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்வர். இவ்வாண்டு 21 இரட்டை மாட்டு வண்டிகளில், பாரம்பரிய பயணம் நேற்று மாலை தொடங்கியது.
குன்றக்குடி, திருப்புத்துார், எஸ். எஸ். கோட்டை, மேலுார் வழியாக 72 கி.மீ., பயணம் செய்து அழகர் கோயில் சென்றடைவர். அங்கு தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி மற்றும் கிடா வெட்டு, அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். நாளை நடக்கும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு அழகர் கோயிலில் இருந்து மாட்டு வண்டியில் சொந்த ஊர் திரும்புவர்.
மக்கள் கூறுகையில்: ஆண்டுதோறும், அழகர் கோயில் குலதெய்வ வழிபாட்டிற்கு, பாரம்பரிய கூட்டு வண்டியில் பயணம் செய்து வருகிறோம். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தாலும் இத்திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பே மாட்டுவண்டி தயார் செய்யப்படும். குலதெய்வ வழிபாடு என்பதால், குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடும் நிகழ்ச்சி அழகர் கோயிலில் தான் நடை பெறும்.
அவ்வாறு மொட்டை போடும் குழந்தையும் தாயும் கூட்டு வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். வேறு வாகனத்தில் செல்லக்கூடாது என்பது ஐதீகம். எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், குலதெய்வ கோயிலுக்கு கூட்டு வண்டியில் தான், பயணம் செய்வோம்.

