/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க தீர்மானம் மாவட்ட திட்டக்குழுவில் முடிவு
/
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க தீர்மானம் மாவட்ட திட்டக்குழுவில் முடிவு
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க தீர்மானம் மாவட்ட திட்டக்குழுவில் முடிவு
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க தீர்மானம் மாவட்ட திட்டக்குழுவில் முடிவு
ADDED : பிப் 14, 2024 05:13 AM

சிவகங்கை : சிவகங்கையுடன் ஊராட்சிகளை இணைத்து, தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் முன்னிலை வகித்தார். தலைவர் பொன்.மணிபாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கார்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, செயற்பொறியாளர் வெண்ணிலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் பங்கேற்றனர்.
மாவட்ட ஊராட்சி செயலர் செல்வராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ராமநாதன் (தி.மு.க.,) திட்டக்குழு உறுப்பினர்:சிவகங்கை நகராட்சிக்கு ரூ.3.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம், பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம், ரூ.3.90 கோடியில் பஸ் ஸ்டாண்ட், செந்தமிழ்நகர் உட்பட 3 இடங்களில் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டுதல் உட்பட ரூ.73.22 கோடிக்கான திட்டபணிகளை நிறைவேற்றித்தர வேண்டும்.
காஞ்சிரங்கால், கொட்டகுடி கீழ்பாத்தி, வாணியங்குடி, சூரக்குளம் புதுக்கோட்டை ஊராட்சிகளை சிவகங்கையில் இணைத்து, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
கலெக்டர் : இதற்கு நகராட்சியில் முதலில் தீர்மானம் நிறைவேற்றி, பின்னர் அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்னர் மக்களிடம் பொது கருத்து கேட்டுத்தான், அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பெரி.பாலமுருகன் (தி.மு.க.,) திட்டக்குழு உறுப்பினர்:தேவகோட்டை நகராட்சி 27 வது வார்டு நகர்நல மையம் ரூ.90 லட்சத்தில் கட்டி,காம்பவுண்ட் சுவர், கழிப்பறை வசதியின்றி உள்ளது.6வது தொகுதி பள்ளியில் சேதமான அங்கன்வாடி கட்டடத்தை அகற்றி, புதிதாக கட்டித்தர வேண்டும்.
மஞ்சரி லட்சுமணன் (தி.மு.க.,) திட்டக்குழு உறுப்பினர்: காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுார் வரை குறுகிய பாலம், ரோடு சேதம் அடைந்துள்ளது. கால்நடைகள் ரோட்டில் திரிவதால் விபத்து நேரிடுகிறது. ஆற்காடு வெளுவூர் ஊராட்சி, தம்பிபுரத்தில் ரோடு வசதி செய்ய வேண்டும்.
கலெக்டர்: கால்நடைகளை அடைக்க காரைக்குடியில் 'பவுண்ட்' அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். நகராட்சி நிதியில் ரோடு வசதி செய்யப்படும்.
சேங்கைமாறன் (தி.மு.க.,), பேரூராட்சி தலைவர், திருப்புவனம்: திருப்புவனம், பழைய பஸ் டெப்போ அருகே மின்மயானம் கட்டி 8 மாதமாக செயல்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், பரிசோதனைக்காக 5 உடலை எரித்து பார்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
கோகிலாராணி (தி.மு.க.,), பேரூராட்சி தலைவர், திருப்புத்துார்: தென்மா கண்மாயில் இருந்து தம்மம் ஊரணி வரை மழை நீரை சேகரிக்க ஏதுவாக, நீர்வரத்து கால்வாய்களை துார்வாரி, சுத்தம் செய்துதர வேண்டும். இதற்காக முதற்கட்டமாக ரூ.3.5 கோடி ஒதுக்கி, இப்பணி கிடப்பில் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

