/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய தயக்கம்
/
பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய தயக்கம்
ADDED : மே 15, 2024 06:29 AM

பொதுமக்கள் தொலை துாரம் பயணம் செய்ய பெரும்பாலும் அரசு பஸ்களையே நம்பி உள்ளனர்.
புண்ணிய நகரான ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். பாம்பன் கடல் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் பணி நடைபெறுவதால் மதுரை வரை ரயிலில் வந்து அங்கிருந்து அரசு பஸ் மூலம் ராமேஸ்வரம் சென்று வருகின்றனர்.
இவர்களை நம்பி மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக கும்பகோணம், மதுரை, சேலம், கோவை கோட்டங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த 95 பஸ்களும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 40 பஸ்களும், சேலம், கோவை, ஈரோடு கோட்டங்களில் இருந்து தலா இரண்டு முதல் ஐந்து பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
இதுதவிர இந்த வழித்தடத்தில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசு டவுன் பஸ்கள் முதல் சமீபத்தில் வாங்கப்பட்ட மஞ்சள் நிற புதிய பஸ்களும் விபத்தில் சிக்கி பயணிகள் காயமடைகின்றனர்.
மதுரையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் திருப்புவனம் வழியாக சென்ற மூன்று அரசு பஸ்கள் விபத்தில் சிக்கியதால் பயணிகள் பரிதவித்தனர்.
தொலை துார பஸ்களில் தனியாக பயணம் செய்யும் பெண்கள், முதியோர் விபத்துகளில் சிக்கும் பஸ்களால் பரிதவித்து வருகின்றனர். வழியில் பழுதாகி நிற்கும் போது சுமைகள், குழந்தைகள் ஆகியோருடன் அடுத்த பஸ்சில் மாறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
திருப்புவனத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு மஞ்சள் நிற புதிய பஸ்கள் பழுதாகி பயணிகளை நடு வழியில் இறக்கி விட்டனர்.
இதனால் பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யவே அச்சப்படுகின்றனர். பழைய பஸ்களை பராமரிக்காததுடன் புதிய பஸ்களையும் சரிவர பராமரிப்பதில்லை.
பஸ்களுக்கான உதிரி பாகங்களும் பணிமனைகளில் இருப்பதில்லை என டிரைவர், கண்டக்டர்கள் புலம்புகின்றனர். எனவே தமிழக அரசு பஸ்களை பராமரித்து முறையாக இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

