/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் உழவர்சந்தை காலி; மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டம் தயாராகிறது
/
காரைக்குடியில் உழவர்சந்தை காலி; மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டம் தயாராகிறது
காரைக்குடியில் உழவர்சந்தை காலி; மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டம் தயாராகிறது
காரைக்குடியில் உழவர்சந்தை காலி; மாநகராட்சி அலுவலகம் கட்ட திட்டம் தயாராகிறது
ADDED : ஏப் 05, 2024 06:18 AM

காரைக்குடி நகராட்சியில், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே கடந்த 2001ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி உழவர் சந்தையை திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்திடவும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் தி.மு.க., ஆட்சியில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. 60 கடைகளுடன் செயல்பட்டு வந்த சந்தை மூலம் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.
காரைக்குடி, பெரிய கோட்டை சிறுகபட்டி அரியக்குடி பானாவயல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விளையும் கத்தரி, வெண்டை, தக்காளி மற்றும் கீரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உழவர் சந்தைக்கு என வேளாண்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, டோக்கன் மற்றும் தராசுகள் வழங்குதல், காய்கறி விலை குறிப்பிடுதல், சந்தை நிலவரம் குறித்து அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது. கருணாநிதியின் கனவு திட்டமான உழவர் சந்தை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கூட 10க்கும் மேற்பட்ட கடைகளுடன் செயல்பட்டு வந்தது.
தற்போது மொத்த கடைகளும் மூடப்பட்டுள்ளது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் உழவர்சந்தை புத்துயிர் பெறும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், மொத்தமாக உழவர் சந்தை மூடும் அபாயத்தில் உள்ளது. காரைக்குடி நகராட்சி, மாநகராட்சி ஆக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பூங்கா தேர்வு செய்யப்பட்டாலும் இடம் போதிய அளவு இல்லாததால் அருகே உள்ள உழவர் சந்தை இடமும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிய வருகிறது. இதனால் உழவர் சந்தை மொத்தமாக காலியாகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தமிழ்ச்செல்வி வேளாண் துணை இயக்குனர் கூறியதாவது:
காரைக்குடி பகுதியில் சாலையோர காய்கறி கடைகள் அதிகரித்து விட்டதால் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருவது குறைந்து விட்டது. உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு காய்கறி கிடைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
சாலையோர கடைகளை மீண்டும் உழவர் சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடமும் நகராட்சியிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம். மாநகராட்சி அலுவலக புதிய கட்டடத்திற்கு உழவர் சந்தை இடமும் சேர்க்கப்படுவதாக தகவல் வருகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. உழவர் சந்தையை மாற்றுவதற்கு பல செயல்முறைகள் உள்ளன. நாங்கள் எங்களது மேல் அதிகாரியிடம் தகவல் அளித்துள்ளோம் என்றார்.

