/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆற்றில் பாலம் இல்லாமல் மக்களுக்கு சிரமம்!
/
ஆற்றில் பாலம் இல்லாமல் மக்களுக்கு சிரமம்!
ADDED : செப் 11, 2024 06:12 AM

ஆத்தங்கரைப்பட்டி வாணியங்காடு ஊராட்சியிலுள்ள குக்கிராமம். திருப்புத்துார்- கண்டரமாணிக்கம் ரோட்டிலிருந்து 3 கி.மீ. விலக்கு ரோட்டில் சென்றால் இக்கிராமத்திற்கு செல்ல முடியும். 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்திலிருந்து 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினசரி சைக்கிள்களில் பல கி.மீ. துாரத்திற்கு சென்று பள்ளிகளுக்கு செல்வதைப் பார்க்க முடியும். கிராமத்தின் ஒரு புறம் ரோடு மற்றொரு புறம் விருசுழியாறு செல்வதால் பஸ் போக்குவரத்தின்றி உள்ளது.
மறுபுற கிராமமான கிளாமடம் செல்ல ஆத்தங்கரைப்பட்டி ஆற்றில் பாலம் தேவை. அதற்கு நீண்ட காலமாக கிராமத்தினர் கோரினாலும் நிறைவேற்றப்படவில்லை.
காரணம் அதிகமாக மக்கள் தொகை இல்லை. வணிகரீதியாக வருவாய் தராது என்பது தான். இதனால் இக்கிராம மக்களின் கோரிக்கை சாத்தியமாக்கப்படவில்லை.
இவர்கள் வேலைக்கு செல்லும் போது ஆற்றில் நடந்தோ அல்லது இரு சக்கர வாகனங்களை ஆற்றில் உருட்டிக்கொண்டு கடந்து பின்னர் எதிர்புறம் உள்ள கிளாமடம் வழியாக கிளாமடம், தென்கரை சென்று காரைக்குடி ரோட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இல்லாவிட்டால் 6 கி.மீ. துாரமுள்ள திருப்புத்துார் சென்று காரைக்குடிக்கு சுற்றிச் செல்ல வேண்டும். இந்த ஆற்றில் தரைப் பாலம் கட்டி போக்குவரத்து துவக்கினால், ஆத்தங்கரைப்பட்டி மட்டுமின்றி கிளாமடம், அதிகரம், தென்கரை, நயினார்பட்டி, தென்மாப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தினருக்கு எளிதாக இருக்கும்.
ஆத்தங்கரைப்பட்டி பழனிக்குமார் கூறுகையில், எங்களுக்கு பஸ் போக்குவரத்து அவசியம். ஆற்றில் தரைப்பாலம் கட்டினால் திருப்புத்தூர், தென்மாப்பட்டு, ஆத்தங்கரைப்பட்டி, அதிகரம், தென்கரை, சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, கும்மங்குடிப்பட்டி, ஊர்குளத்தான்பட்டி, தம்பிபட்டி, திருப்புத்துார் வழியில் டவுன் பஸ் இயக்க முடியும்.
கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பலன் அடைவர்' என்றார். அதே போல இக்கிராமத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் ஊருணியில் குடிநீர் எடுத்து பயன்படுத்தினர்.
பராமரிப்பின்றி ஊருணி நீர் வரத்து பாதிக்கப்பட்டு மாசடைந்ததால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கத் துவங்கினர். பல குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போதும் மேல்நிலை தொட்டி மூலம் காலை, மாலை இருவேளை குழாயில் நீர் வருகிறது.
இருப்பினும், குடிநீருக்கும், சமைக்கவும் குடிநீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்துகின்றனர். தற்போது காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் தயாராகி வருகிறது.
இத்திட்டத்திலாவது நல்ல குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

