/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
3 கோடி மீட்டரில் பதிவாகும் விபரத்தை சேகரிக்க 'காமன் மீட்டர் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்'
/
3 கோடி மீட்டரில் பதிவாகும் விபரத்தை சேகரிக்க 'காமன் மீட்டர் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்'
3 கோடி மீட்டரில் பதிவாகும் விபரத்தை சேகரிக்க 'காமன் மீட்டர் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்'
3 கோடி மீட்டரில் பதிவாகும் விபரத்தை சேகரிக்க 'காமன் மீட்டர் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்'
ADDED : ஏப் 03, 2024 12:06 PM
சென்னை : தமிழகம் முழுதும், 3 கோடி மீட்டர்களில் பதிவாகும் மின் அளவை சென்னையில் சேகரிக்க, மின் வாரியம், பொது மீட்டர் தரவு மேலாண்மை அமைப்பை ஏற்படுத்த உள்ளது.
தமிழக மின் வாரியத்திற்கு வீடுகள், தொழில் நிறுவனங்கள் உட்பட, 3.31 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில், 21 லட்சம் விவசாயம்; 9.45 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், அவற்றில் மீட்டர் பொருத்தப்படவில்லை.
மற்ற அனைத்து பிரிவு மின் இணைப்புகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர, துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும், 'பீடர்' எனப்படும் வழித்தடங்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.மின் ஊழியர்கள் இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். சிலர் குறித்த நேரத்தில் கணக்கெடுக்க செல்வதில்லை. இதனால் குறைந்த மின் பயன்பாடு உள்ள வீடுகளில் கூட, அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. குறைத்து கணக்கெடுப்பதால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஆளில்லாமல் கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்ட பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டு, பணி நடந்து வருகிறது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், அத்திட்டத்தை துவக்க இன்னும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, ஏற்கனவே மாநிலம் முழுதும் உள்ள, 3 கோடி மீட்டர்களில் பதிவாகும் மின்சார அளவு, 'வோல்டேஜ்' அளவு போன்றவற்றை, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க, 'காமன் மீட்டர் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனப்படும், பொது மீட்டர் தரவு மேலாண்மை அமைப்பு என்ற திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் மீட்டர்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு தகவலை பெறுவதற்கு, தொலைதொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதனுடன், பொது மீட்டர் தரவு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைக்கப்படும்.இதன் வாயிலாக மீட்டரை பார்த்து, எந்த வழித்தடத்தில் எவ்வளவு மின்சாரம் செல்கிறது, எந்த இடத்தில் அதிக மின் பயன்பாடு உள்ளது உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக அறிய முடியும்.மின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில், 'ஓவர்லோடு' போன்ற பிரச்னை ஏற்படாமல் இருக்க, கூடுதல் சாதனங்கள் நிறுவப்பட வேண்டும். முதல் கட்டமாக, 5 லட்சம் மீட்டர்களில் பதிவாகும் விபரங்களை கண்டறிய, பொது மீட்டர் தரவு மேலாண்மை அமைப்பிற்கு மென்பொருள் உருவாக்கி தர ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. நிறுவனம் தேர்வானதும் பணிகள் துவக்கப்படும்.இத்திட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து எஞ்சிய அனைத்து மீட்டர்களும் பொது தரவு மேலாண்மையுடன் இணைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

