/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே 2 கி.மீ., துாரம் எரியாத விளக்கு
/
சிவகங்கை அருகே 2 கி.மீ., துாரம் எரியாத விளக்கு
ADDED : டிச 01, 2024 07:13 AM
சிவகங்கை : சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து அண்ணாமலை நகர் செல்லும் பகுதியில் உள்ள அரசு குடியிருப்பு வரை தெரு விளக்குகள் முழுவதும் எரிவதில்லை. ஆயுதப்படை குடியிருப்பில் இருந்து அண்ணாமலை நகர் வரை இருளில் மக்கள் அச்சத்துடன் கடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே உள்ளது பவுலா நகர். இந்த பகுதியில் தான் குடிசை மாற்று வாரியத்தால் ரூ.55.40 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 625 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அதற்கு எதிர் புறம் தமிழ்நாடு காவல் வீட்டு வசதிக்கழகம் சார்பில் போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் ரூ.44 கோடி மதிப்பில் 140 வீடுகள் கட்டப்பட்டு அங்கும் போலீசார் குடியிருந்து வருகின்றனர். அருகில் உள்ள பவுலா நகரில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் இருந்து அண்ணாமலை நகரை இணைக்கும் வகையில் 2 கி.மீ., துாரத்துக்கு சாலை உள்ளது.
இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம சாலைத் திட்டத்தில் ரூ.2.84 கோடியில் சீரமைக்கப்பட்டது. புதிதாக சாலை அமைக்கும் போதே ரோட்டின் ஓரங்களில் இருந்து மண்ணை அள்ளி பயன்படுத்தியுள்ளனர். ரோட்டின் இருபுறங்களிலும் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டின் இருபுறமும் மண் அணைக்க வேண்டும். ஒருசில இடத்தை தவிர பெரும்பாலான இடத்தில் மண் அணைக்கவில்லை.
மண் அணைத்த இடங்களிலும் முறையாக பணி மேற்கொள்ளாததால் அணைக்கப்பட்ட மண் மழைக்கு கரைந்து ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் செல்லும் பள்ளி வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுத்து ஒதுங்க முடியவில்லை.
வாகனங்களின் டயர்கள் பள்ளங்களில் சிக்கி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த ரோட்டில் இரு புறங்களிலும் தெரு விளக்கு கிடையாது. 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் நகருக்கு வந்து வீடு திரும்பும் பெண்கள் ரோட்டை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் செல்லக்கூடிய ரோட்டின் இரு புறங்களிலும் மண் அணைத்தும், இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

