/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம் அடிப்படை வசதியில்லாத வாரச்சந்தை இடநெருக்கடிக்கு தீர்வு எப்போது
/
அவலம் அடிப்படை வசதியில்லாத வாரச்சந்தை இடநெருக்கடிக்கு தீர்வு எப்போது
அவலம் அடிப்படை வசதியில்லாத வாரச்சந்தை இடநெருக்கடிக்கு தீர்வு எப்போது
அவலம் அடிப்படை வசதியில்லாத வாரச்சந்தை இடநெருக்கடிக்கு தீர்வு எப்போது
ADDED : ஏப் 04, 2024 04:01 AM
தேவகோட்டை, : தேவகோட்டை நகரில் கண்டதேவி ரோட்டில் ஞாயிறு சந்தை செயல்படுகிறது. இந்த வாரச்சந்தைக்கு உள்ளூர், அருகில் உள்ள கிராமங்களை தவிர திண்டுக்கல், பழநி, தேனி, மதுரை, நத்தம் , பரமக்குடி உட்பட 100 க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பொருட்களை விற்க வியாபாரிகள் வருகின்றனர். வாரச்சந்தையில் 500 கடைகள் அமைக்கப்படுகிறது.
இந்த வாரச்சந்தையில் எந்தவொரு அடிப்படை, அத்தியாவசிய வசதி இல்லை. குடிநீரும் இல்லை. இயற்கை உபாதைகளை கழிக்க வியாபாரிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழலில் வியாபாரிகள், குறிப்பாக பெண் வியாபாரிகள் அவதி சொல்லி மாளாது. அவசரத்திற்கு முட்புதர்களை தேடி ஓடுகின்றனர். சிலர் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறை செல்கின்றனர். நகராட்சியினர் சந்தைக்கு குத்தகை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நகராட்சி மவுனம் காக்கிறது. மேலும் சந்தையின் உட்பகுதியில் கடைகளின் கூரை தகரம் மிக உயரமாக இருப்பதால் வெயிலுக்கும் பயன் இல்லை, மழைக்கும் பயனில்லை.
கடைகளும் சீராக அமைக்காததால் மக்கள் நடந்து சென்று பொருட்கள் வாங்க முடியாது. சந்தைக்கு வெளியேயும் கடைகள் அமைக்கப்படுவதால் டூவீலர்களில் கூட செல்ல முடியாமல் மக்கள் சிரமத்தில் உள்ளனர். பஸ் செல்லும் ரோடு என்பதால் போலீசார் பாடு திண்டாட்டமாக உள்ளது.
இந்த அவலங்களை நகராட்சியினர் பார்வைக்கு கொண்டு சென்ற போது வாரசந்தையை சீரமைத்து அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டுவோம் என கூறினர். ஆனால் தற்போது இடம் தொடர்பாக பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர். முழுவதும் கட்டுவதற்கு முன் அத்தியாவசிய தேவையான கழிப்பறைகளை போதிய அளவில் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அழகாபுரி நகர் துரைராஜ் கூறுகையில், சந்தையில் கடைகளை ஒழுங்குபடுத்தி அமைக்க வேண்டும். டூவீலர் நிறுத்த இடமில்லை. முழுவதும் கூரை அமைக்க வேண்டும். கழிப்பறை இல்லாததால் அருகில் உள்ள கோயில், தனியார் வீடுகளில் உதவி கேட்க வேண்டி உள்ளது. வாரசந்தையை சுற்றி வேலி அமைத்து கேட் போட வேண்டும் என்றார்.

