/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேலவெள்ளஞ்சம்பட்டியில் திறந்து கிடக்கும் கால்வாய் குழந்தைகள் தவறி விழும் அபாயம்
/
மேலவெள்ளஞ்சம்பட்டியில் திறந்து கிடக்கும் கால்வாய் குழந்தைகள் தவறி விழும் அபாயம்
மேலவெள்ளஞ்சம்பட்டியில் திறந்து கிடக்கும் கால்வாய் குழந்தைகள் தவறி விழும் அபாயம்
மேலவெள்ளஞ்சம்பட்டியில் திறந்து கிடக்கும் கால்வாய் குழந்தைகள் தவறி விழும் அபாயம்
ADDED : செப் 12, 2024 04:54 AM

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம், அம்மன்பட்டி ஊராட்சி மேலவெள்ளஞ்சம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் திறந்தே கிடப்பதால், குழந்தைகள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
காளையார்கோவில் ஒன்றியம், அம்மன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவெள்ளஞ்சிபட்டியில் 1.10 கி.மீ., துாரத்திற்கு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதுப்பித்தனர். அதே போன்று ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் செல்ல 3 அடி ஆழத்திற்கு கான்கிரீட் கால்வாய் அமைத்தனர். மேலும் மேலவெள்ளஞ்சிபட்டி கண்மாய் நீர் ஊருக்குள் வராமல் இருக்க தடுப்பு சுவர் அமைத்துள்ளனர்.
இதற்காக கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.45 கோடி வரை ஒதுக்கியுள்ளனர். இந்நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், கழிவுநீர் செல்லும் கால்வாய் கட்டிய நிலையில் அதற்கு மேல் சிமென்ட் சிலாப் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாயை முற்றிலும் மூடாமல், பல இடங்களில் திறந்தவெளியாக உள்ளது.
கால்வாய் மேல் அமர்ந்து இக்கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடுகின்றனர். திறந்து கிடக்கும் கால்வாய் வழியாக குழந்தைகள் தவறி விழுந்து, விபத்து ஏற்படும் அச்சம் அக்கிராம மக்களிடம் உள்ளது. குறிப்பாக கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் இக்கிராமத்தில் அமைக்கப்பட்ட ரோடுகள் வீடுகளுக்கு மேல் உயரமாக இருப்பதால், மழை நீர் ரோட்டில் இருந்து வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது.
மழைக்காலங்களில் இக்கிராம மக்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகாத வகையில் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கிராமப்புற சிறுவர்கள் கால்வாய்க்குள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் முன், திறந்து கிடக்கும் கால்வாய்களில் மூடியிட்டு மூடிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலவெள்ளஞ்சம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

