/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
/
திருப்புவனத்தில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
திருப்புவனத்தில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
திருப்புவனத்தில் குப்பை தேக்கம் துர்நாற்றத்தால் மக்கள் தவிப்பு
ADDED : ஏப் 12, 2024 04:53 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் குப்பைகளை கொட்ட இடம் இல்லாததால் கடந்த இரு நாட்களாக திருப்புவனத்தில் சுகாதார பணிகள் நிறுத்தப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது.
திருப்புவனம் நகரில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர 100க்கும் மேற்பட்ட காய்கறி, டீக்கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருப்புவனம் பேரூராட்சி சார்பில் இரண்டு மேஸ்திரிகள் தலைமையில் 80 துாய்மை பணியாளர்கள் இரண்டு டிராக்டர்கள், மூன்று சரக்கு வேன்கள், சிறிய ரக சரக்கு ஆட்டோக்கள் மூலம் தினசரி ஆறு டன் குப்பை வரை சேகரிக்கின்றனர்.
முகூர்த்த நாட்கள், திருவிழா நாட்களில் இரு மடங்கு குப்பை சேகரிக்கப்படும், திருப்புவனத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை மதுரை ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். குப்பை கிடங்கு நிரம்பி வழிந்ததால் திருப்புவனம் புதுார் அருகே வைகை ஆற்றை ஒட்டியுள்ள தனியார் நிலத்திற்கு மாதம் தோறும் வாடகை கொடுத்து அங்கு கொட்டி வந்தனர். சில மாதங்களாக வாடகை தராததால் நிலத்தின் உரிமையாளர்கள் குப்பை கொட்டக் கூடாது என தடுத்து விட்டனர். இதனால் தினசரி குப்பைகளை சேகரிக்கும் பணியை இரு நாட்களாக நிறுத்தி விட்டனர். ஏற்கனவே சேகரித்த குப்பைகளுடன் டிராக்டர், வேன் ஆகியவற்றை பேரூராட்சி அலுவலக வாசலில் நிறுத்தியுள்ளனர். மேலும் மூன்று வாகனங்கள் பழுதாகி செயல் படாமல் உள்ளது.
தினசரி வீதிகளில் குப்பைகளை அள்ளாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவி வருவதுடன் குப்பைகளுடன் ரோட்டில் பேரூராட்சி வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது மேலும் சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குப்பைகளை கொட்ட இடம் தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரித்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

