ADDED : மார் 28, 2024 05:43 AM
காரைக்குடி: காரைக்குடியில் ராஜிவ் சிலை மூடப்படாத நிலையில், சிலைக்கு முன் கட்சி கொடிகள் அகற்றப்படாதது குறித்து கட்சியினர் புகார் எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் படம், அரசு சாதனை விளக்கப்படம் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
தவிர, தலைவர்களின் சிலைகள், கட்சி சின்னங்கள் துணியால் மூடப்பட்டது. காரைக்குடி பகுதியிலும் எம்.ஜி.ஆர்., சிலை மூடப்பட்டுள்ளது. ஆனால் கல்லுாரி சாலையில், கையை காண்பித்தபடி உள்ள ராஜிவ் சிலை மூடப்படவில்லை. மேலும் சிலையின் முன்பு காங்.,கொடிகள் அகற்றப்படாமல் பறந்து வருகிறது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பால்துரை கூறுகையில்: இறந்த தலைவர்கள் சிலையை மறைக்க தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் காண்பிப்பது போல் இருந்தால் சிலையை மறைக்க அறிவுறுத்தியுள்ளனர். சின்னங்களோ கட்சிக்கொடிகளோ இருந்தால் அகற்ற வேண்டும் என்றார்.
காரைக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் சிலை மூடப்படாதது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நிலையில் உடனடியாக தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சிலையை துணியால் மறைத்தனர்.

