/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிளக்ஸ் பேனர்களால் சிவகங்கையில் விபத்து அதிகரிப்பு
/
பிளக்ஸ் பேனர்களால் சிவகங்கையில் விபத்து அதிகரிப்பு
பிளக்ஸ் பேனர்களால் சிவகங்கையில் விபத்து அதிகரிப்பு
பிளக்ஸ் பேனர்களால் சிவகங்கையில் விபத்து அதிகரிப்பு
ADDED : செப் 18, 2024 06:11 AM
சிவகங்கை : பிளக்ஸ் பேனர்களால் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகும் நிலை தொடர்கிறது. சிவகங்கையில் ரோட்டின் ஓரமாக ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகளை காவு வாங்கும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வைக்கும் பிளக்ஸ் பேனர்களால் விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகின்றனர். இந்த பிளக்ஸ் போர்டுகளினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு கட்டுபாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடு தமிழகத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் பின்பற்றப்பட்டன. மீண்டும் பழைய படி கட்டுப்பாடுகளை மீறி போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும் ஆங்காங்கே பிளக்ஸ் வைத்து வருகின்றனர்.
சிவகங்கையில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் பேனர் அதிகமாக வைக்கின்றனர். அதேபோல் அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிக்கும் அதிக அளவில் பிளக்ஸ் பேனர் வைக்கின்றனர். பெரும்பாலும் பழைய கோர்ட் அருகே திருப்புத்துார் ரோடு, நேரு பஜார், தொண்டி சாலை, போஸ் ரோடு, அரண்மனை வாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக மிகப்பெரிய பேனர் வைக்கின்றனர். அதேபோல் சுப நிகழ்ச்சி தினங்களில் ஒவ்வொரு திருமண மண்டபம் முன்பும் பிளக்ஸ் பேனர் வைக்கின்றனர்.
உள்ளாட்சி மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் வைக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தாலும் யாரும் அனுமதி பெற்று வைப்பதில்லை. போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

