/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி
/
மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி
ADDED : மே 21, 2024 09:35 AM

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் கட்டடத்தில் இந்தியன் வங்கி உள்ளது. வங்கிக்கு வாட்ச்மேன் இல்லை. சனிக்கிழமை ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
இதை பயன்படுத்தி நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு மேல் வங்கியின் முன்பக்க கதவில் உள்ள பூட்டுக்களை மர்ம நபர்கள் வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.
அதில் உள்ளே நுழைய முடியாததால் மாடிப்படி ஓரத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை வளைத்து அதன் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.
லாக்கரை திறக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.
நேற்று காலை 9:00 மணிக்கு வங்கி மேலாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் வங்கியை திறக்க வந்தபோது கதவில் இருந்த பூட்டுக்கள் மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். லாக்கரை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் மற்றும் நகைகள் தப்பின.
கூட்டுறவு வங்கியிலும் முயற்சி
சிவகங்கை அருகே கீழக்கண்டனியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. நேற்று நள்ளிரவில் வங்கி கட்டடத்திற்குள் நுழைந்த நபர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் இணைப்புகளை துண்டித்து விட்டு கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த எச்சரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சென்றது. வங்கிச் செயலாளர் விஜயகுமார் சங்கத்திற்கு வந்தார். அப்போது கொள்ளை முயற்சி நடந்துள்ளது தெரிய வந்தது. சிவகங்கை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.

