ADDED : ஏப் 25, 2024 05:57 AM
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் மகளிருக்காக இயக்கப்படும் இலவச பேருந்து மகளிரை தவிக்கவிடும் சம்பவம் தொடர்கிறது.
திருப்புத்துார் அரசு பஸ் டெப்போ மூலம் கீழச்சிவல்பட்டியில் இருந்து சிங்கம்புணரிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. சில நாட்களாக இந்த பஸ் பழுதாகி விட்டதாக கூறி மாற்று பேருந்தாக வேறு பஸ் இயக்கப்படுகிறது.
அப்படி இயக்கப்படும் மாற்றுப் பேருந்து சில நேரங்களில் குறிப்பிட்ட ஊருக்குச் செல்லாமல் ரூட்டை மாற்றி வேறு ஊருக்கு கட்டணம் வசூலித்து இயக்கப்படுகிறது. இதனால் இப்பேருந்தை நம்பி வரும் பயணிகள், குறிப்பாக கையில் பணம் எடுத்து வராத பெண்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
நேற்று காலை இப்பேருந்தில் கீழச்சிவல்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வந்த பயணிகள் சிலர் மதியம் 3:30 மணிக்கு ஊருக்கு திரும்ப சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த குறிப்பிட்ட அந்த மாற்று பேருந்தில் கீழச்சிவல்பட்டிக்கு பதிலாக நத்தம் என்று எழுதி ஒட்டிக்கொண்டு பயணிகளிடம் டிக்கெட் வசூலித்து ஏற்றினர்.
இதற்கு கீழச்சிவல்பட்டியை சேர்ந்த பயணிகள்எதிர்ப்பு தெரிவித்து டிரைவர், கண்டக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அவர்கள், இது அந்த பேருந்து கிடையாது, மாற்று பேருந்து. அதனால் இதை எங்கு வேண்டுமானாலும் டிக்கெட் வசூல் செய்து தான் இயக்குவோம், என்றனர்.
பயணிகள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் வேறு வழியில்லாமல் நத்தம் பயணிகளை இறக்கி விட்டு இலவச பேருந்தாக மீண்டும் கீழச்சிவல்பட்டி பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

