/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீ வைப்பால் வலுவிழக்கும் பாலங்கள்
/
தீ வைப்பால் வலுவிழக்கும் பாலங்கள்
ADDED : ஏப் 29, 2024 05:31 AM

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் பலவும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை பாலத்தின் அடியில் கொட்டி தீ வைப்பதால் பாலங்கள் வலுவிழந்து வருகின்றன.
திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினசரி டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அழிக்கப்பட வேண்டும், இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நிதி ஒதுக்கி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உர கிடங்குகளும் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. ஆனால் உரிய வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் இல்லாததால் உரகிடங்குகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன.
போதிய ஊழியர்கள் இல்லாததால் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே எடுத்து வந்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பாலங்களின் அடியில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.
போதிய காற்றோட்டம் இல்லாததால் தீ முழுமையாக பிடிக்காமல் புகை மூட்டம் கிளம்பி நாள் முழுவதும் புகைந்த வண்ணம் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். திருப்புவனம் புதூர் பழையனூர் பாலம், தட்டான்குளம் நான்கு வழிச்சாலை பாலம் உள்ளிட்ட பாலங்களின் அடியில் தினசரி குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். பாலத்தின் இருபுறமும் இரண்டு டிரான்ஸ்பார்மர்கள் உள்ளது தீப்பிடித்து எரிவதால் விபத்து அபாயம் உள்ளது.
இறைச்சி, பாலித்தீன், பேப்பர் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால அடர்த்தியான புகை கிளம்பி சுவாசிக்க சிரமம் ஏற்படுகிறது. பாலத்தின் அடியில் தீ வைப்பதால், சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பாலங்களின் தாங்கு திறனும் பாதிக்கப்படுகிறது.

