/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதிய ரேஷன் கார்டு கோரி 60 ஆயிரம் மனுக்கள் நிலுவை
/
புதிய ரேஷன் கார்டு கோரி 60 ஆயிரம் மனுக்கள் நிலுவை
ADDED : மே 14, 2024 07:19 PM
சிவகங்கை:மகளிர் உதவித் தொகை வழங்கும் பணிக்காக தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலம் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. புதிய ரேஷன் கார்டு பெறுவது, முகவரி மாற்றம், பிழை திருத்தம் போன்றவைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2023 ஜூலை முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. முகவரி மாற்றம், பிழைத் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க சில மாதங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டது. 10 மாதங்களாகியும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி துவங்கப்படவில்லை. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களுக்கு அலைகின்றனர்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தோர் கூறியதாவது: புதியதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பின்னரே புதிய கார்டுக்கு விண்ணப்பித்தோம். தற்போது பெயர்களை நீக்கி விட்டதால் எங்களது பெயர்கள் எதிலும் இல்லை. அரசின் எந்த சலுகைகளும் பெற முடியவில்லை. எங்கு சென்றாலும் முகவரிக்கு ரேஷன் அட்டை கேட்கின்றனர். புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை அரசு துவங்க வேண்டும் என்றார்.
உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஒட்டு எண்ணிக்கை முடிந்ததும் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளது என்றார்.

