ADDED : பிப் 05, 2024 10:30 AM
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே ராசிபுரம் சாலையில் எஸ்.பாப்பாரப்பட்டி, சாக்ரடீஸ் நகர் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
அங்கு, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதன் எதிரே, எஸ்.பாப்பாரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அதே வளாகத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது.
மாணவர்கள், மக்கள் நடமாட்டமுள்ள அப்பகுதியில் ராசிபுரத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி, காகாபாளையம், திருச்செங்கோடுக்கு, இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் உள்ளிட்டவை, வேகமாகவே கடந்து செல்கின்றன.
இதனால் அரசு தொடக்கப்பள்ளிக்கு, சுற்றுவட்டாரங்களில் இருந்து வரும் மாணவர்கள் சாலையை கடந்து பள்ளிக்கு வந்து செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது.
அதனால் பள்ளி நுழைவாயில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி நுழைவாயில் எதிர் எதிரே உள்ள இப்பகுதியில், சாலை இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க, அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. அதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசு பள்ளி முன் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

