/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலையில் வேர் அழுகலை கட்டுப்படுத்த வழிமுறை
/
நிலக்கடலையில் வேர் அழுகலை கட்டுப்படுத்த வழிமுறை
ADDED : மே 25, 2024 02:12 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நிலக்கடலை விதை வாங்கி செல்கின்றனர். தற்போது தொடர் மழையால் நிலக்கடலை செடியை வேர் அழுகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு அறிக்கை: நிலக்கடலையில் ஒரு வகை பூஞ்சாணம் தாக்குவதால் வேர் அழுகல் நோய் ஏற்படுகிறது. இந்நோயால், 60 முதல், 100 சதவீதம் வரை, மகசூல் இழப்பு ஏற்படும். மண், செடி சருகுகளில் பூஞ்சாணத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில்
இருக்கும்.
பாசன நீர், கால்நடைகள், மனிதர்கள் மூலம் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். மண் மீது உள்ள பயிர் கழிவை, ஆழமாக உழவு செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோ டெர்மா விரிடி, 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்யலாம். இல்லையெனில், 1 கிலோ விதைக்கு, 2 கிராம் கார்பன்டாசிம் என்ற அளவில் பூஞ்சாண கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
ஹெக்டேருக்கு டிரைக்கோடெர்மாவிரிடி, 2 முதல், 5 கிலோ அளவில், 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். ஹெக்டேருக்கு ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம்புண்ணாக்கு, 500 கிலோ பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் நீரில், ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை, செடியின் வேர் பகுதி நனையும்படி ஊற்றி வேர் அழகல் நோயை
கட்டுப்படுத்தலாம்.

