/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி பட்டாசு விபத்து: 19 பேருக்கு சிகிச்சை
/
தீபாவளி பட்டாசு விபத்து: 19 பேருக்கு சிகிச்சை
ADDED : நவ 02, 2024 01:21 AM
சேலம், நவ. 2-
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
எதிர்பாராதவிதமாக பட்டாசு விபத்துக்கு ஆளாகி, தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 20 படுக்கை வசதிகள் கொண்ட தீக்காயம் சிறப்பு சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டு, 24 மணிநேர சிகிச்சைக்கு தயார்படுத்தப்பட்டது.
அதன்படி தீக்காயமடைந்த சேலம் பூபாலன், 25, குகையை சேர்ந்த ரவி, 26, இளம்பிள்ளை ராஜேஷ், 28, திருப்பத்துார் விமல்ராஜ், 30, கடலுார் வேல்முருகன், 43, நாமக்கல் கலையரசன், 10, கள்ளக்குறிச்சி பாஸ்கர், 11, ஆகிய ஏழு பேர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தவிர ஆண், பெண் தலா மூவர், 5 சிறுவர்கள், ஒரு சிறுமி என, 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு, வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று திரும்பினர். இத்தகவலை, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.

