ADDED : மார் 18, 2025 01:56 AM
மேட்டூர் அருகே தென்பட்ட வெண்பிடரி
சேலம்:சேலம் வனக்கோட்டம் சார்பில் நில பறவை கணக்கெடுப்பு கடந்த, 15, 16ல் நடந்தது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய வனச்சரகம், கிராம பகுதிகள் என, 25 இடங்களில் நில பறவை கணக்கெடுப்பு நடந்தது. வனத்துறையினர், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நீர் பறவைகளில் வெளிநாட்டு பறவை இனங்கள் காணப்படும். நில பறவைகளில் பெரும்பாலும் உள்நாட்டு பறவை இனங்கள் தான் இருக்கும்.
தகைவிலான், புதர்சிட்டு பஞ்சுருட்டான், வல்லுாறு, மைனா, மாடப்புறா, பச்சைக்கிளி, புள்ளிச்சில்லை, சாம்பல் கதிர்சிட்டு, வெண்பிடரி உள்ளிட்ட பறவை இனங்கள் காணப்பட்டன. மேட்டூர் சோலப்பாடி, ஓணான்கரடு ஆகிய இடங்களில் வெண்பிடரி பட்டாணி குருவி காணப்பட்டது. இரவில் காணப்படும் பறவைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடந்தது. இதுகுறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

