/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள் ; என்று தீரும் இந்த சோகம்
/
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள் ; என்று தீரும் இந்த சோகம்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள் ; என்று தீரும் இந்த சோகம்
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிக்கு ஏங்கும் கிராம மக்கள் ; என்று தீரும் இந்த சோகம்
ADDED : மார் 10, 2024 03:53 AM

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்தில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், பஸ் வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் அவதிப்படும் இம்மக்கள் ''என்று தீரும் எங்கள் சோகம்,'' என வேதனை தெரிவித்தனர்.
முதுகுளத்துார் அருகே முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.
பஸ்வசதி இல்லாததால் பல கி.மீ., நடந்து சென்று பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. குடிநீர் வசதி இல்லாததால் சுகாதாரமற்ற கலங்கிய ஊருணி தண்ணீரை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராம மக்கள் சிலர் கூறியதாவது:
அமைச்சர் தொகுதியில் அவலம்
ராமராஜ்: முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்தில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. நடந்து செல்வதற்கே சிரமப்படுகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
பஸ் வசதி இல்லாததால் 1 கி.மீ., நடந்து சென்று விக்கிரபாண்டியபுரம் விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.
நடப்பதற்கு லாயக்கற்ற சாலையாக இருப்பதால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இதனால் கர்ப்பிணிகள், நோயாளி களை கட்டிலில் துாக்கிச் செல்லும் அவலநிலை உள்ளது. இரவு நேரங்களில் டூவீலரில் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தொகுதி அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.முத்துராமலிங்கம்பட்டி கிராமம் முதுகுளத்துார் தாலுகாவில் கடைசி எல்லையாக உள்ளது. இதன் அருகில் பரமக்குடி சட்ட சபை தொகுதி உள்ளது.
இதனால் எல்லையை காரணம் காட்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு சாலை வசதி செய்யாமல் உள்ளனர். எனவே முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்
பாண்டி: கிராமத்திற்கு தேவையான குடிநீர் வசதி இல்லை. காவிரி குடிநீரும் வருவதில்லை. இதனால் 2 கி.மீ., தள்ளு வண்டியில் சென்று சுகாதாரமற்ற ஊருணி தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பஸ் வசதி இல்லாமலும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கும் நிலை தான் உள்ளது.
எனவே கலெக்டர் விஷ்ணு சந்திரன் முத்துராமலிங்கபுரம்பட்டி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இப்பகுதியில் சாலை முழுமையாக சேதம் அடைந்திருப்பதால் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இரண்டு பேர் சாலையில் உருண்டு புரண்டு தங்கள் எதிர்ப்பை காட்டி சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

