ADDED : பிப் 19, 2024 05:23 AM
பரமக்குடி : பரமக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய கட்டடங்களை திறந்தார். மாவட்டத்தில் 18 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதன்படி 4386 மனுக்களில் துறை ரீதியாக 3090 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 துறைகள் மூலம் 4 கோடியே 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 3900 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., க்கள் காதர் பாட்ஷா, முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், பரமக்குடி தாசில்தார் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

