/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலை சுற்றிலும் 150 ஆக்கிரமிப்பு கடைகள்; பக்தர்கள், உள்ளூர் மக்கள் தகராறு : அதிகாரிகளோ பாராமுகம்
/
ராமேஸ்வரம் கோயிலை சுற்றிலும் 150 ஆக்கிரமிப்பு கடைகள்; பக்தர்கள், உள்ளூர் மக்கள் தகராறு : அதிகாரிகளோ பாராமுகம்
ராமேஸ்வரம் கோயிலை சுற்றிலும் 150 ஆக்கிரமிப்பு கடைகள்; பக்தர்கள், உள்ளூர் மக்கள் தகராறு : அதிகாரிகளோ பாராமுகம்
ராமேஸ்வரம் கோயிலை சுற்றிலும் 150 ஆக்கிரமிப்பு கடைகள்; பக்தர்கள், உள்ளூர் மக்கள் தகராறு : அதிகாரிகளோ பாராமுகம்
UPDATED : டிச 18, 2025 09:13 AM
ADDED : டிச 18, 2025 05:27 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதிகளை சுற்றிலும் சாலை ஓரத்தில் கடைகளால் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வியாபாரிகள், பக்தர்கள் இடையே தகராறு ஏற்படுகிறது. அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஹிந்து சமய அறநிலையத்துறை வடக்கு ரதவீதியில் அமைத்த கழிப்பறை போதுமானதாக இல்லை.
கோயில் கிழக்கு, தெற்கு ரதவீதியில் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி, இலவச கழிப்பறை கூடம் இல்லாததால் 95 சதவீதம் பக்தர்கள் தனியார் கழிப்பறை, தங்கும் விடுதியை தேடிச் செல்கின்றனர். இதில் ஏழை, நடுத்தர குடும்ப பக்தர்கள் தனியார் விடுதிகளுக்கு செல்ல முடியாத சூழலில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.
கிழக்கு, தெற்கு ரத வீதியில் இலவச கழிப்பறை கூடம், ஓய்வறையை அமைக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளவில்லை.
ஆக்கிரமிப்பு அட்டகாசம் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தவறிய தமிழக அரசு, மற்றொரு பிரச்னையாக பக்தர்கள் நடமாடும் ரதவீதியை கூட ஒழுங்குபடுத்த முடியாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ராமேஸ்வரம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கோயில் நான்கு ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் சாலையின் இருபுறமும் 150க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமித்து, 30அடி சாலையை 10 அடியாக மாற்றி உள்ளனர்.
குறிப்பாக விடுமுறை நாட்கள், விழாக் காலத்தில் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் போது ரதவீதி சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் இடறி விழுகின்றனர்.
தகராறு, மிரட்டல் இதனால் பக்தர்களிடம் தற்காலிக கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், சில சமயம் வெளியூர் பக்தர்கள் தானே என ஏளனமாக பேசி, தவறி கீழே விழும் பொருள்களுக்கு பணம் கேட்டு தகராறு செய்து மிரட்டுகின்றனர். தரிசனத்திற்கு வரும் உள்ளூர் மக்கள், பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்ற வரும் யாத்திரை பணியாளர்கள், தங்களது டூவீலர்களை ரதவீதியில் நிறுத்தி செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது உள்ளூர் மக்கள், யாத்திரை பணியாளர்கள் வடக்கு, கிழக்கு ரதவீதியில் டூவீலர்களை நிறுத்தும் போது அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் டூவீலர்களை நிறுத்த கூடாது எடுத்து செல்லுங்கள் எனக் கடுகடுப்பாக கூறுகின்றனர். இதனால் உள்ளூர் மக்களும், ஆக்கிரமிப்பு கடையை வைத்துக் கொண்டு எங்களது டூவீலரை நிறுத்த தடை போடுகிறீர்களா என கூறியதும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு இனிவரும் நாளில் அடிதடியாக மாறும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் பாராமுகம் இந்த ஆக்கிரமிப்பு கடைக்காரர்களால் வெளியூர், உள்ளூர் பக்தர்கள், யாத்திரை பணியாளர்கள் பாதிக்கப்படுவது குறித்தும், ஆக்கிரமிப்பு கடைகாரர்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் ராமேஸ்வரம் நகராட்சி, வருவாய்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள், ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்வதில்லை.
மேலும் இந்த ஆக்கிரமிப்பு கடைகாரர்களிடம் ஆளும் கட்சி ஆசியுடன் சிலர் மாத வாடகை வசூலித்து அவர்களுக்கு பக்கபலமாக நிற்பதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாமல் பாராமுகமாக செல்கின்றனர்.
உயர்நீதிமன்றம் முன்வருமா இதுகுறித்து பாரத் சேவா ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவர் எம்.சுடலை கூறுகையில், கோயில் ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த சாலையில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இதனை அகற்றி பக்தர்கள் நலன் பாதுகாக்க வேண்டியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பதால் ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளும் முன்வருவதில்லை. எனவே பழநி கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது போல், ராமேஸ்வரம் கோயில் ரதவீதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன்வர வேண்டும். அப்போது தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
* ராமேஸ்வரம் தாசில்தார் முரளிதரன் கூறுகையில், தற்போது எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் திருத்தம் படிவம் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும் ஜன.,யில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் ஆண்டவர் கூறுகையில், கோயில் நான்கு ரதவீதி சாலை மாநில நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானது. இப்பகுதியில் நகராட்சி மூலம் குப்பை அள்ளி, சுகாதாரம் பராமரிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் ரதவீதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உதவிடுவோம் என்றார்.

