/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் விடுவிப்பு
/
தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் விடுவிப்பு
தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் விடுவிப்பு
தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் விடுவிப்பு
ADDED : ஏப் 22, 2024 06:08 AM

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின் மீண்டும் கடலில் விடப்பட்டது.
எஸ்.பி.பட்டினம் அருகே மன்னார் வளைகுடா கடலில் திமிங்கலம், கடல் பசு, சுறா, டால்பின் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அதிகளவில் வாழ்கின்றன.
நேற்று எஸ்.பி.பட்டினம் அருகே தீர்த்தாண்டதானம் கடலில் மீனவர்கள் முத்தமிழ், முத்துக்குமார், அன்பு ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் ஐந்து அடி நீளமுள்ள பெண் டால்பின் ஒன்று உயிருடன் சிக்கியது.
மீனவர்கள் உடனடியாக அதனை மீண்டும் கடலில் விட நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அந்த டால்பின் கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாமல் கரையை நோக்கி வந்தது. ராமநாதபுரம் வனரேஞ்சர் திவ்யாலட்சுமிக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கால்நடை டாக்டர்களை கொண்டு டால்பினை பரிசோதனை செய்ததில் வாய் முழுவதும் புண் இருந்ததுடன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
மருத்துவர்கள் டால்பினுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக கரையில் பிளாஸ்டிக் விரிப்பு விரித்து அதில் நீரை நிரப்பி டால்பினை நீண்ட நேரம் நீந்த விட்டனர். அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் டால்பின் கடலில் விடப்பட்டது.

