/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களை விடுவிக்க உங்களால் தான் முடியும் பன்னீர் செல்வத்திடம் சங்கத்தினர் முறையீடு
/
மீனவர்களை விடுவிக்க உங்களால் தான் முடியும் பன்னீர் செல்வத்திடம் சங்கத்தினர் முறையீடு
மீனவர்களை விடுவிக்க உங்களால் தான் முடியும் பன்னீர் செல்வத்திடம் சங்கத்தினர் முறையீடு
மீனவர்களை விடுவிக்க உங்களால் தான் முடியும் பன்னீர் செல்வத்திடம் சங்கத்தினர் முறையீடு
ADDED : மார் 27, 2024 01:18 AM

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு நெருக்கமான உங்களால் தான் முடியும், என ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ராமநாதபுரம் தொகுதி பா.ஜ., கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது மீனவர் சங்க தலைவர்கள் ஜேசு, சகாயம், எமரிட், மீனவ பெண்கள் பலர் அவரிடம் கோரிக்கைகளை வைத்தனர்.
அதில் இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்கள் 53 பேரையும், சிறை தண்டனை பெற்ற 5 மீனவர்களையும் விடுவிக்க பல அரசியல் தலைவர்களிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. முதன் முதலாக எங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ள நீங்கள் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்.
நீங்கள் பிரதமரிடம் பேசினால் மீனவர்களை விடுவிக்க முடியும். இதனை நீங்கள் செய்தால் மீனவர் சமுதாயம் உங்களுக்கு நன்றிக் கடனாக தேர்தலில் ஓட்டளிப்போம். இது சத்தியம் என மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
அதன் பின் பன்னீர்செல்வம் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், மத்திய அமைச்சர் முருகனிடம் அலைபேசியில் இதுகுறித்துப் பேசினார்.
பின் மீனவர்களிடம் அவர் பேசியதாவது: மூன்று முறை முதல்வராக இருந்த போது மீனவர்கள் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் கடிதம் மூலம் வலியுறுத்தினேன். தற்போது சிறையில் வாடும் 53 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இலங்கைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ஓரிரு நாட்களில் மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என மத்திய அமைச்சர் முருகன் கூறினார். இதன் பின் தண்டனை பெற்றுள்ள 5 மீனவர்களை சட்ட ரீதியாக ஜாமினில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
பிரதமர், வெளியுறவு அமைச்சர், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் வலியுறுத்துவேன் என்றார்.
தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். தர்மர் எம்.பி., உடனிருந்தார்.

