/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்., மோதல்
/
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்., மோதல்
ADDED : மார் 27, 2024 01:17 AM
ராமநாதபுரம்:-ராமன் எத்தனை ராமனடி என்ற சினிமா பாடல் பாணியில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வேட்பாளர்கள் குவிகின்றனர்.
அ.தி.மு.க., கொடி, கட்சி சின்னம், கரை வேட்டி பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து அவரை வீழ்த்தவும், வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தவும் எதிர் அணிகளின் வேட்பாளர்கள், கட்சியினர் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அவரது பெயரில் பல வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.
நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று அவரே மேலும் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இவர் தவிர ராமநாதபுரம் தெற்கு காட்டூர் ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளம் ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம், மதுரை, சோலை அழகுபுரம் ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என மேலும் மூன்று பேர் சுயேச்சையாக நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதுவரை ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தையும் சேர்த்து 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று(மார்ச் 27) கடைசி நாளில் இன்னும் எத்தனை பன்னீர்செல்வங்கள் வருவார்களோ...

