/
உள்ளூர் செய்திகள்
/
புதுக்கோட்டை
/
பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
/
பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை
ADDED : மே 14, 2024 08:03 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப்பழத்திற்கு அதிக சுவையும், விளைச்சலும் அதிகமாக இருப்பதால், இப்பகுதியில் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்கவும், இப்பகுதி பலா பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை. விடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கைகாட்டி, நெடுவாசல், கீரமங்கலம், மறமடக்கி, கொத்தமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முக்கனிகளில் ஒன்றான பலா மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். இப்பகுதிகளில் செம்மண், ஆழ்குழாய் பாசனம் மற்றும் வறட்சி பகுதியில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவையுடன், மிகவும் ருசியாக இருப்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் நன்கு விளைந்த பலாப்பழங்களை விவசாயிகள் பறித்து வடகாடு, மாங்காடு, அனவயல், கைகாட்டி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலாப்பழ கமிஷன் கடைகள் மற்றும் ஏலக்கடைகள் மூலமாக எடை மற்றும் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
சீசன் சமயங்களில் நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் ஆயிரம் டன் வரை பலாப்பழம் ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர பெரும்பாலான பலாப்பழ விவசாயிகள் பலரும் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக, தங்களது பலா மரங்களை ஆண்டு கணக்கில் குத்தகை மற்றும் ஒத்திக்கு கொடுத்து வருகின்றனர். இப்பகுதிகளில் டன் கணக்கில் பலாப்பழங்கள் உற்பத்தி ஆனாலும் கூட, இதன் மூலமாக, விவசாயிகள் பொருளாதார வளர்ச்சி காண முடியாத நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.200-க்கும் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. சில நேரங்களில் பலா விளைச்சல் அதிகம் இருந்தும் உரிய விலை இல்லாமல் பலா மரங்களிலேயே பழுத்து வீணாகுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் இப்பகுதியில் உற்பத்தியாகும் பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேலும், அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு சரிவர கிடைப்பது இல்லை. இங்குள்ள பலாப்பழங்கள் மிகுந்த சுவையும், ருசியாக இருக்கும். ஆகையால், மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் அமைப்பதின் மூலமாக விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருக்கிறது.
எனவே, இப்பகுதியில் உற்பத்தியாகும் பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதுடன், மதிப்பு கூட்டும் தொழிற்சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

