ADDED : மார் 16, 2024 02:05 AM

கூடலுார்;கூடலுார் ஓவேலி அருகே, காட்டு யானை தாக்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஓவேலி பெரியசூண்டி பகுதியில் சாலையில் நடந்து சென்ற, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 25, என்பவரை காட்டு யானை தாக்கியது.
படுகாயம் அடைந்த அவரை வன ஊழியர்கள் மீட்டு, வனத்துறை வாகனம் மூலம் சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனை சேர்த்தனர்.
வனச்சரகர் சுரேஷ், வனவர் சுபைத் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்தை கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், ஆர்.டி.ஓ., செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, டி.எஸ்.பி.,க்கள் வசந்தகுமார், சரவணன், தாசில்தார் ராஜேஸ்வரி ஆய்வு செய்தனர்.
அவர்களை சந்தித்த மக்கள், 'மீண்டும் இது போன்ற சம்பவம் ஏற்படுவதை தடுக்க, குடியிருப்புகளை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்; அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைப்பதுடன், கூடுதல் ஊழியர்களை நியமித்து யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், யானைகள் நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
இப்பகுதியில் தொடரும் யானை-மனித மோதலால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.

