/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புறநகர் மக்களின் தேவை நிறைவேறுமா... எதிர்பார்ப்பு! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
/
புறநகர் மக்களின் தேவை நிறைவேறுமா... எதிர்பார்ப்பு! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
புறநகர் மக்களின் தேவை நிறைவேறுமா... எதிர்பார்ப்பு! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
புறநகர் மக்களின் தேவை நிறைவேறுமா... எதிர்பார்ப்பு! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
ADDED : பிப் 16, 2024 11:17 PM
அன்னுார்:கோவை புறநகர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வருகிற 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது :
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடகா வரை தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வாக, அன்னுார் நகரில் கிழக்கு புறவழிச் சாலை அமைக்க 110 கோடி ரூபாயில் மாநில நெடுஞ்சாலை துறை திட்டம் தயாரித்து நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அதன் பிறகு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக கிழக்கு புறவழிச் சாலை தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக புறவழிச்சாலை அமைப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்த கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில அரசின் மெத்தனத்தால் நிலம் கையகப்படுத்துவதில் தேக்கம் உள்ளது.
கரூரிலிருந்து கோவைக்குபசுமை புறவழிச்சாலை அமைக்க ஐந்தாண்டுகளுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அன்னுார் தாலுகாவில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குன்னத்துார் ஆகிய ஊராட்சிகள் வழியாக நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் முடியும்படி இந்த புறவழிச் சாலைக்கு கற்கள் நடப்பட்டது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.
அத்திக்கடவு திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1100 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. நான்காண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க., அரசு விடுபட்ட குளங்கள் குறித்து ஆய்வு நடத்தி, அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், தமிழக அரசு பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் அத்திக்கடவு இரண்டாம் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
அன்னுார் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அன்னுார் கிளை நுாலகம் தாலுகா நுாலகமாக தரம் உயர்த்தப்படவில்லை. அன்னுார் அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர் ஆனால் வெறும் 52 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இதை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும். அன்னுார் தாலுகாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையம் மற்றும் அன்னுார் கோர்ட்டுக்கு சொந்த கட்டடம் கட்டித் தர வேண்டும்.
அன்னுார் வட்டாரத்தில் செயல்பட்டு வந்த ஒரே அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கடந்த ஆண்டு மூடப்பட்டு விட்டது. இதனால், அன்னுார் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் அரசு பாலிடெக்னிக்கில் சேர கோவை செல்ல வேண்டி உள்ளது. அன்னுார் வட்டாரத்தில் புதிய பாலிடெக்னிக் அல்லது ஐடிஐ அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அன்னூர் மக்கள் தெரிவித்தனர்.

