/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் கோடை மழை தாமதமாகி வருவதால் குட்டைகளில் நீர் சேமிப்பு!
/
நீலகிரியில் கோடை மழை தாமதமாகி வருவதால் குட்டைகளில் நீர் சேமிப்பு!
நீலகிரியில் கோடை மழை தாமதமாகி வருவதால் குட்டைகளில் நீர் சேமிப்பு!
நீலகிரியில் கோடை மழை தாமதமாகி வருவதால் குட்டைகளில் நீர் சேமிப்பு!
ADDED : ஏப் 06, 2024 07:00 AM

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை பொய்த்து வருவதால், குட்டைகளில் நீர் சேமித்து, காய்கறி உற்பத்திக்கு பயன்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப்படியாக, ஊட்டி, எம். பாலாடா, நஞ்சநாடு, கப்பச்சி, கோத்தகிரி, நெடுகுளா, ஈளாடா, வ.உ.சி., நகர் மற்றும் கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், வெள்ளைப் பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிரிடப்படுகிறது. நடப்பாண்டு, கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து கடும் வெயிலான காலநிலை நிலவுகிறது. இதனால், கிணறு, ஓடை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டுள்ளன. வறட்சி நாட்களில், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் காய்கறி பயிரிடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நீர்குட்டையில் 'பிளாஸ்டிக் ஷீட்'
இந்நிலையில், ஊட்டி பெர்ன்ஹில் உட்பட பல்வேறு பகுதிகளில், காய்கறி பயிரிடுவதற்கு முன்பாகவே, தோட்டங்களில் குட்டைகளை அமைத்து, தண்ணீர் கசிந்து வீணாகாமல் இருக்க, பிளாஸ்டிக் ஷீட்களை குட்டையில் விரித்து நீரை சேமிக்கின்றனர். தொடர்ந்து, காய்கறி நாற்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
காய்கறி உற்பத்தி செய்ய, உயர் ரக விதை உட்பட இடுபொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் கூலி உயர்வு, அறுவடை செய்யப்பட்ட விளை பொருட்களை மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மண்டிகளில் விற்பனை செய்ய கொண்டு செல்ல வேண்டும்.
அதற்கான வாடகை, மண்டி கமிஷன் மற்றும் ஏற்று இறக்கு கூலி உள்ளிட்ட செலவினங்கள் அதிகமா இருப்பதால், போதிய விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் நஷ்டம் ஏற்படும்.
விவசாயிகள் மானியத்தை பயன்படுத்துணும்
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில், 14 முதல், 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், கேரட் அதிகளவிலும், உருளைக்கிழங்கு சொற்ப முறைகளும் பயிரிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், வெயிலான காலநிலை நிலவுவதால், கூடுமானவரை விவசாயிகள், குட்டைகளில் பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தி, தண்ணீரை சேகரித்து தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போது, கேரட் உள்ளிட்ட பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. மழையை எதிர்பார்த்துள்ளோம். கூடுமானவரை விவசாயிகள் 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதிக ஸ்பிரிங்ளர்கள் தேவைப்படும் பட்சத்தில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியவர்களுக்கு கூட, மானியத்தில் வழங்குகிறோம். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.

