/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புனரமைக்கப்பட்ட மருத்துவமனை: இணை இயக்குனர் ஆய்வு
/
புனரமைக்கப்பட்ட மருத்துவமனை: இணை இயக்குனர் ஆய்வு
ADDED : பிப் 07, 2024 10:44 PM

கோத்தகிரி : கோத்தகிரியில், 3.03 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மருத்துவமனையை சுகாதார துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி அரசு மருத்துவமனையை, இப்பகுதியில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பியுள்ளனர். நாள்தோறும், 100க்கும் மேற்பட்டோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை, ஆர்த்தோ, மகப்பேறு, குழந்தைகள் பிரிவு, காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர, இ.சி.ஜி., மற்றும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. மருத்துவமனை பழுதடைந்த கட்டடத்தில், இடம் நெருக்கடியில் இயங்கி வந்தது. இதனால், விபத்துகள் நடக்கும்போது, பலர் காயமடையும் பட்சத்தில், 'வெராண்டாவில்' சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், முதலுதவி சிகிச்சைக்கு பின், 60 கி.மீ., தொலைவில் உள்ள கோவை அல்லது ஊட்டி மருத்துவ கல்லுாரிக்கு நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
'இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, நவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்,' என, மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 3.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அந்த நிதியில், 'அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவு,' என, கட்டடம் கட்டும் பணி, ஒரு ஆண்டுகளுக்கு முன் துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
இறுதி கட்ட பணிகளை, சுகாதார துறை இணை இயக்குனர் பழனிச்சாமி நேற்று ஆய்வு செய்தார். இன்று இதன் திறப்பு விழா நடக்கிறது.

