/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதும் முறையில்... சர்ச்சை! நன்றாக படிக்கும் பல மாணவர்கள் பாதிப்பு
/
ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதும் முறையில்... சர்ச்சை! நன்றாக படிக்கும் பல மாணவர்கள் பாதிப்பு
ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதும் முறையில்... சர்ச்சை! நன்றாக படிக்கும் பல மாணவர்கள் பாதிப்பு
ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதும் முறையில்... சர்ச்சை! நன்றாக படிக்கும் பல மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 28, 2024 05:20 AM
குன்னுார் : மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வில், 279 பேருக்கு 'ஸ்கிரைப்' எனப்படும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுத வைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னுார், கூடலுார் கல்வி மாவட்டங்கள் உள்ளன. அதில், மொத்தம், 6,957 மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். நேற்று முன்தினம் துவங்கிய தமிழ் பாட தேர்வில் மொத்தம், 6,856 பேர் தேர்வு எழுதினர்.101 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
பொதுவாக தேர்வு எழுத முடியாத மாணவ, மாணவிகளுக்கு, 'ஸ்கிரைப்' எனப்படும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கல்வி துறை மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வுஹாலில் இந்த ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாணவருடன் அமர்ந்து, வினாத்தாள்களுக்கு விடை எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த, 10ம் வகுப்பு தேர்வுக்கு, 279 பேருக்கு ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுத அனுமதிக்கபபட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் குற்றச்சாட்டு
இந்நிலையில், குன்னுாரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளி தமிழாசிரியர் விடை தெரிவிக்க, ஸ்கிரைப் ஆசிரியர்கள் தேர்வு எழுதியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, முன்னாள் தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், ''நீலகிரியில் கடந்த, 2 ஆண்டுகளாக சில தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்கள் தேர்வு எழுதுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சில டாக்டர்கள் மூலம் வழங்கும், உடல் நிலை பாதிப்பு சான்றிதழை வைத்து படிக்காத மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதும் சில பள்ளிகளில், 100 சதவீதத்தை காண்பிக்க நடக்கும் முறைகேடுகளை ஆய்வு செய்வது அவசியம்.
தமிழக அளவில் நீலகிரியின் தேர்ச்சி விகிதம் பின் தங்கியுள்ளதால், சில பள்ளிகளில் இதனை ஊக்குவித்தது போல் தெரிகிறது. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் ஸ்கிரைப் மூலம் தேர்வு எழுதப்பட்டுஉள்ளது.
இது போன்று, படிக்காத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுத வைத்து மாணவர்களை வெற்றி பெற வைப்பதும், சில மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்க இது போன்று எழுத வைப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால், முறையாக படித்து விட்டு தேர்வு எழுதும் மாணவர்கள் மனதளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து, நீலகிரி கல்வி துறை அதிகாரிகளுக்கு, விசாரணை நடத்த வேண்டி புகார் மனு அனுப்பி உள்ளேன்,'' என்றார்.
விதிகளின் படி நடக்கிறது
நீலகிரி முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், 'மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, காயம் ஏற்பட்ட மாணவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள், 40 சதவீதத்திற்கு மேல் முடியாத மாற்றுத்திறனாளிகள் என டாக்டர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்தே, 'ஸ்கிரைப்' அனுமதிக்கப்படுகிறது.
கடைசி நேரத்தில் அடிபட்டு காயமடைந்த மாணவர்களுக்கும் அரசின் விதிகளின் படி தேர்வு எழுத வைக்கப்படுகிறது. மற்றபடி ஒன்றும் இல்லை,' என்றனர்.

