/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பட்டா பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
/
பட்டா பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
பட்டா பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
பட்டா பிரச்னைக்கு பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு
ADDED : ஏப் 04, 2025 10:48 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே வெட்டு வாடி பகுதியில் தொடரும் பட்டா பிரச்னைக்கு, அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் எருமாடு அருகே வெட்டுவாடி பகுதியில் கடந்த, 1963 ஆம் ஆண்டு 30 பேருக்கு அப்போதைய அரசு மூலம், 154 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை நில குடியேற்ற கூட்டுறவு சங்கமாக மாற்றினர். அதில், குடியேறியவர்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காகவும் நிலங்களை விற்பனை செய்தனர்.
அதில், தற்போது, 341 குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கைவசம் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க கோரிய கடந்த, 50 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்து வரும் நிலையில், கடந்த, 2023 ஆம் ஆண்டு நில நிர்வாக சீர்திருத்த ஆணையாளர் உத்தரவுப்படி, வருவாய் துறை மூலம் நில அளவை செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது.
அதன் மூலம், 319 நபர்களுக்கு சந்தை மதிப்பு கட்டணம் செலுத்தவும், மாற்று திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என, 22 பேருக்கு இலவசமாக நிலங்களை பட்டா மாற்றம் செய்து நில ஒப்படை செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த மார்ச், 25 ஆம் தேதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், தீர்வு காணப்படாத நிலையில், 5-ம் தேதி(இன்று) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் ஊட்டி வரும் போது போராட்டம் நடத்துவதை தவிர்க்கும் வகையில், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில், 'மக்கள் பயன்பெறும் வகையில் பட்டா வழங்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு பிறப்பித்தால் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய மக்கள்,'முதல்வரை ஊட்டியில் நேரில் சந்திக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்; இன்னும் ஒரு மாத காலத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறும் பட்சம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.
பேச்சுவார்த்தையில் ஊர் தலைவர் ஏசையன், டி.எஸ்.பி., ஜெயபாலன், தாசில்தார் சிராஜூநிஷா, எஸ்.ஐ., பாஸ்கரன், சேரங்கோடு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ., ராஜேந்திரன் மற்றும் கிராம பிரமுகர்கள் செல்வகுமார், விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

