ADDED : பிப் 08, 2024 05:17 AM
பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே குப்பை எரிப்பதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர், அம்மன் நகர் உள்ளிட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதி அருகே உள்ள மயானத்தில் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று டன் எடையுள்ள குப்பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் வெளியாகும் புகையால் நுரையீரல் பாதிப்பும், வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென லட்சுமி நகர், அம்மன் நகர் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மயானத்தில் குப்பைகள் எரிக்கும் போது, காற்று வீச்சின் காரணமாக, மாருதி நகர் குடியிருப்பு பகுதியில் புகையின் தாக்கம் ஏற்படுகிறது. இதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மறியல் செய்யப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி உள்ளிட்டோர் முன்னிலையில், அசோகபுரம் ஊராட்சியில் பேச்சு வார்த்தை நடந்தது.
ஊராட்சி தலைவர் ரமேஷ் பேசுகையில்,அசோகபுரம் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட இடம் இல்லை. அதனால், மயானம் அருகே கொட்டப்படுகிறது. குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை செய்ய, அசோகபுரம் ஊராட்சிக்கு இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை எதுவும் இல்லை. இடம் கொடுத்தால், அங்கு குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை செய்ய தயாராக உள்ளோம். இரவு நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

