/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலையில் பனி; மதியம் மழை; இரவில் கடும் குளிர் 'நடுக்கத்தில்' மலை மாவட்ட மக்கள்
/
காலையில் பனி; மதியம் மழை; இரவில் கடும் குளிர் 'நடுக்கத்தில்' மலை மாவட்ட மக்கள்
காலையில் பனி; மதியம் மழை; இரவில் கடும் குளிர் 'நடுக்கத்தில்' மலை மாவட்ட மக்கள்
காலையில் பனி; மதியம் மழை; இரவில் கடும் குளிர் 'நடுக்கத்தில்' மலை மாவட்ட மக்கள்
ADDED : டிச 17, 2025 06:43 AM

--நிருபர் குழு-:
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அதிகாலை பனி; பகலில் மேக மூட்டத்துடன் மழை; இரவில் கடும் குளிரான காலநிலை நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, குன்னுார், மஞ்சூர், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடும் உறை பனி பொழிவு காணப்பட்டது.
அதில், அவலாஞ்சியில் வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை சென்றது. ஊட்டி புறநகர் பகுதியில் ஒரு டிகிரி செல்சியஸ்; குன்னுாரில், 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்த பட்ச வெப்பநிலை நிலவியது. இதனால், நிலவிய கடும் குளிரால், காலை மற்றும் இரவில் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மூன்று விதமாக காலநிலை இந்நிலையில், நேற்று அதிகாலை ஊட்டியில் பனிப்பொழிவு ஏற்பட்டு, நகரின் குறைந்த பட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியசாக இருந்தது. பகல், 8:00 மணிக்கு மேல் கடும் மேக மூட்டமாக காலநிலை நிலவியது. இதனால், மாணவ, மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், தொழிலாளர்கள் பணிக்கு செல்வதிலும் பாதிப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் 'மிஸ்ட்' விளக்கை எரியவிட்டு இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன்பின், 12:00 மணிக்கு ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் மேக மூட்டத்துடன், சாரல் மழையும் நீடித்தது. சுற்றுலா மையங்களில், சுற்றுலா பயணிகள் குறைந்து காணப்பட்டாலும், 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுக்க அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளை அணிந்து வந்தனர். உள்ளூரில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.
உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய ஆலோசனை அலுவலர் முருகேசன் கூறுகையில், '' ஊட்டி, குன்னுாரில் கடந்த சில நாட்களாக குறைந்த பட்ச வெப்பநிலை நிலவுகிறது. இரு நாட்கள் சாரல் மழை இருக்கும். அதன்பின், பனி பொழிவு அதிகரிக்கும்.
தேயிலை தோட்டத்தில் கருகும் இலைகளை அகற்றி மற்ற செடிகளை பாதுகாக்க விவசாயிகள் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்,'' என்றார்.
போலீசார் கூறுகையில், 'விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க, உள்ளூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களை மலை பாதையில், மித வேகத்தில் எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,' என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

