ADDED : மார் 13, 2024 10:20 PM

மேட்டுப்பாளையம் : குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்காத, சிறுமுகை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்த, பொது மக்கள் முடிவு செய்துள்ளனர்.
சிறுமுகை பேரூராட்சியில், மத்திய அரசின் திட்டமான அம்ருத் குடிநீர் திட்டப்பணிகள், 19.97 கோடி ரூபாய் செலவில் நடைபெறுகின்றன.
குழாய் பதிக்க கான்கிரீட் சாலையை உடைத்து, இரண்டு மாதங்கள் ஆகியும், இன்னும் குழாய் பதிக்காமல் உள்ளனர். இது குறித்து சிறுமுகை நகர மக்கள் கூறியதாவது:
சிறுமுகையில் 10க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகள் உள்ளன. அனைத்து வீதிகளிலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மிகவும் குறுகலான சாலையாகும். இந்நிலையில் புதிதாக, குடிநீர் குழாய் பதிக்க, இரண்டு மாதங்களுக்கு முன், கான்கிரீட் சாலையின் மையப் பகுதியில் உள்ள காரையை, பவர் டில்லர் வாயிலாக உடைத்தனர். உடனடியாக குழாய் பதிக்காமல், அப்படியே விட்டு விட்டனர். இதனால் சைக்கிள் ஓட்டும் சிறுவர்கள், விபத்துக்கு உள்ளாகி காயமடைகின்றனர். இரவில் இருசக்கர வாகனங்களில் வீடுகளுக்கு வருபவர்கள், சறுக்கி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.
குடிநீர் குழாய் பதிக்கும் படி, பேரூராட்சி செயல் அலுவலர், தலைவரிடம் கூறினோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால் உடனடியாக குழாய் பதிக்க கோரி, பொது மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சிறுமுகைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கரிடம் கேட்டபோது, அண்ணா நகர், ஜீவா நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதித்திருக்க வேண்டும். ஏன் பதிக்கவில்லை என தெரிய வில்லை.
நேரில் ஆய்வு செய்து குழாய் பதிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

