/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் 154 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
குன்னுாரில் 154 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குன்னுாரில் 154 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குன்னுாரில் 154 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : டிச 13, 2024 08:36 PM

குன்னுார்; குன்னுார், கோத்தகிரியில் மழையின் காரணமாக நிலச்சரிவு அபாயமுள்ள, 154 இடங்கள் முழு கண்காணிப்பில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்நிலையில், குன்னுாரில் சில இடங்களில் சாரல் மழையும், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதையில் சாரல் மழையுடன் மேகமூட்டமும் நீடித்தது. இதனால், வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு இயக்கப்பட்டன. கடுங்குளிர் நிலவியதால், மக்களின் சகஜ வாழ்க்கை பாதித்தது.
சிம்ஸ்பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரெயின்கோட் அணிந்து பூங்காவில் வலம் வந்து புகைப்படம் எடுத்தனர். கடைகளில் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 16, 17 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துறை அரசு அதிகாரிகளும் 'அலர்டாக' இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நிவாரண மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மீட்பு நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குன்னுார் நகராட்சியில், 3 பொக்லைன் உட்பட டவுன் பஞ்., கிராம பஞ்.,களில் பொக்லைன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி மாநில, தேசிய நெடுஞ்சாலைதுறையினர், தீயணைப்பு துறையினரும், 24 மணி நேர பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குன்னுார், கோத்தகிரி தாலுகாக்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள, 154 இடங்களும் முழு கண்காணிப்பில் உள்ளது.
பேரிடர் ஏற்பட்டால் உடனுக்குடன தகவல் அளிக்க தன்னார்வலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் களத்தில் உள்ளனர். அனைத்து சமுதாய கூடம் மற்றும் பள்ளிகளில் நிவாரண முகாம்களை தயார்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.

